திருந்த மாட்டேல… கையை அறுத்து கோலி படத்திற்கு திலகமிட்ட ரசிகர்… கிழித்தெடுத்த நெட்டிசன்கள்

ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் ஆர்.சி.பி. அணி கோப்பையை வென்று 18 ஆண்டுகால எதிர்பார்ப்புக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைத்தது. நீண்ட கால பரிதவிப்புக்கு திருப்புமுனையாக கோப்பை வென்ற ஆர்.சி.பி. அணிக்கு கொஞ்சமும் நேரம் சரியில்லை என்று சொல்லும் அளவுக்கு பல்வேறு நிகழ்வுகள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து அரங்கேறி வருகிறது. கோப்பை வென்ற ஆர்.சி.பி. அணி வெற்றி பேரணி செல்ல முடிவு செய்தது.

எனினும், சரியான முன்னேற்பாடுகள் செய்யாததால், பேரணி கூட்ட நெரிசலாக மாறி 11 அப்பாவி மக்களின் உயிரை பறித்தது. கூட்ட நெரிசல் சம்பவம் உயிர்களை காவு வாங்க ஆர்.சி.பி. அணிக்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்புக் குரல் கிளம்பியது. இன்று வரை வெற்றி பேரணி நடத்தியிருக்க கூடாது என்றும் கூட்ட நெரிசலுக்கு யார் யார் பொறுப்பு என்பது தொடர்பான பேச்சுக்கள் தொடர்கின்றன.

இது தொடர்பாக காவல்துறை நடவடிக்கை, ஆர்.சி.பி மற்றும் வெற்றி பேரணிக்கு ஏற்பாடு செய்த நிறுவனம் என கிட்டத்தட்ட நான்கு பேர் கைதாகி உள்ளனர். மேலும், இது தொடர்பாக காவல் துறையில் தொடர்ச்சியாக புகார் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கூட்ட நெரிசலின் காயம் ஆறுவதற்குள் ரசிகர் ஒருவர் செய்த செயல் நெட்டிசன்களை கடந்து பொது மக்களிடம் கடும் எதிர்ப்பை பெற்று வருகிறது. மேலும், அந்த ரசிகரின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வைரல் வீடியோவின் படி, ரசிகர் ஒருவர் தனது கையை கிழித்து தனது இரத்தத்தை எடுத்து விராட் கோலியின் புகைப்படத்திற்கு திலகமிடும் பரபர காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கையை கிழித்த வலியை அந்த ரசிகர் தனது முகத்தில் வெளிப்படுத்தவில்லை. மேலும் தொடர்ச்சியாக 2 முறைக்கும் மேலாக கையை கிழித்து இரத்தத்தை கோலியின் புகைப்படத்திற்கு திலகமிடுவதை வீடியோவில் தெளிவாக பார்க்க முடிகிறது.

ஏற்கனவே ஆர்.சி.பி. வெற்றி பேரணி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆர்.சி.பி. ரசிகர் ஒருவர் தனது கையை கிழித்து சொந்த இரத்தத்தை கோலியின் புகைப்படத்திற்கு திலகமாக வைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் கடந்து பலதரப்பினரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும், இந்த வீடியோவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும், சிலர் இப்படி செய்வது ஆர்வ கோளாறான விஷயம் என்பது போன்ற கருத்துக்களை கமென்ட் செய்து வருகின்றனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா கிரிக்பஸ்-க்கு அளித்த பேட்டியில், “ஒருகட்டத்தில் பி.சி.சி.ஐ. எதையாவது செய்ய வேண்டும். நாம் மௌனமாக இருக்க முடியாது. அது ஆர்.சி.பி.யின் தனிப்பட்ட விவகாரம் என்றாலும், பி.சி.சி.ஐ. தரப்பில் இந்திய கிரிக்கெட்டிற்கு நாங்கள் பொறுப்பேற்ற இத்தகைய நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்,” என்று தெரிவித்தார்.

Leave a Comment