11 பேர் உயிரிழந்த விவகாரம்: விராட் கோலி மீது காவல் நிலையத்தில் புகார்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி வீரர் விராட் கோலி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகில் அரங்கேறிய கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விராட் கோலியை எதிர்த்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள கப்பன் பார்க் காவல் நிலையத்தில் நயிஜா ஹொரட்டகாரரா வேதிகே சார்பில் ஏ.எம். வெங்கடேஷ் என்பவர் விராட் கோலி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் ஏ.எம். வெங்கடேஷ் அளித்த புகாரை ஏற்றுக் கொண்டுள்ளனர். மேலும், இவரது புகார் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் ஏற்கனவே இது தொடர்பாக பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர். உடனேயே விசாரணை நடைபெறும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கூட்ட நெரிசல் தொடர்பாக கர்நாடக காவல் துறை முறையான அனுமதியின்றி வெற்றி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாக ஆர்.சி.பி. நிர்வாகம், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டி.என்.ஏ. நிறுவனம் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் கூட்டமைப்பின் நிர்வாக குழு மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக சட்டப்பிரிவு 105, 115(2), 118(1), 118(2), 3(5), 190, 132, 125(a), 125(b) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவைதவிர கப்பன் பார்க் காவல் நிலையத்தில் கூட்ட நெரிசல் தொடர்பாக மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரோலண்ட் கோம்ஸ் என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அடுத்து இவர் அளித்த புகாரின் பேரில் ஆர்.சி.பி. நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் கூட்டமைப்பு மற்றும் டி.என்.ஏ. நிறுவனங்கள் மீது சட்டப்பிரிவு 125 (a) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment