ஸ்ரேயஸ் என்னை அறைந்திருக்க வேண்டும் – மனம்திறந்து பேசிய ஷஷாங்க் சிங்

ஐ.பி.எல். 2025 தொடரின் 2-வது குவாலிபையர் போட்டியில் நான் செய்த தவறுக்கு ஸ்ரேயஸ் அய்யர் என்னை அறைந்திருக்கலாம் என்று பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ளார். 2025 ஐ.பி.எல். தொடரில் தனது செயல்பாடுகளால் கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் ஸ்ரேயஸ் அய்யர் இந்த முறை தனது அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார்.

2025 ஐ.பி.எல். தொடரில் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 2-வது குவாலிபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில், களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஷஷாங்க் சிங் தவறு ஒன்றை இழைத்துவிட்டார். 204 ரன்களை துரத்திய பஞ்டசாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்திருந்தது.

17-வது ஓவரில் ஷஷாங்க் ஷாட் அடித்துவிட்டு எளிதான ஒரு ரன் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா துரிதமாக செயல்பட ஷஷாங்க் சிங் அதே பந்தில் ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதனால் போட்டியின் தன்மை கைமீறி செல்லும் நிலை உருவானது. எனினும், கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் அபாரமாக ஆடி தனது அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார்.

இதுதவிர போட்டியில் ஷஷாங் சிங் மிகவும் அஜாக்கிரதையாக செயல்பட்டதை அடுத்து, போட்டிக்கு பின் ஸ்ரேயஸ் அய்யர் ஷஷாங்க் சிங்கிடம் கைகுலுக்காமல், அவரை வசைபாடிக் கொண்டே கடந்து சென்றார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தற்போது ஐ.பி.எல். தொடர் முடிந்துவிட்ட நிலையில், அன்றைய தினம் போட்டிக்கு பின் நடந்தது என்ன என்பதை ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஷஷாங்க் சிங், “எனக்கு நடந்தது சரியானது தான், அய்யர் என்னை கண்ணத்திலேயே அறைந்திருக்க வேண்டும், நாங்கள் இறுதிப் போட்டிக்கு செல்லும் வரை என் தந்தையும் என்னுடன் பேசவில்லை. நான் அப்போது பூங்காவில் நடப்பது போன்றுகூட நடக்கவில்லை. கடற்கரையில் நடப்பதை போல் செயல்பட்டேன். அது மிகவும் இக்கட்டான சூழ்நிலை, என்னிடம் இருந்து அத்தகைய செயலை எதிர்பார்க்கவில்லை என்பதில் ஸ்ரேயஸ் மிகவும் உறுதியாக இருந்தார். அதன்பிறகு அவர் என்ன இரவு உணவு சாப்பிட அழைத்துச் சென்றார்,” என தெரிவித்தார்.

ஸ்ரேயஸ் அய்யர் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், நடந்து முடிந்த சீசனில் இரண்டவாது அணியாக முடித்துக் கொண்டது.

Leave a Comment