india
பீகார் அதிச்சி: கட்டுமான பணி நடைபெற்ற பாலமும் அம்பேல்… 11 நாட்களில் இது 5-வது நிகழ்வு!
பீகாரின் மதுபானி பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த பாலம் இடிந்துவிழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுபானி பகுதியில் ஓடும் புத்தாஹி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம், பாதி பணிகள் முடிந்திருந்த நிலையில் இடிந்து விழுந்தது. அதேபோல், கிஷான்கஞ்ச் மாவட்டத்தில் பகதுர்கஞ்ச் பகுதியில் உள்ள மற்றொரு பாலமும் நேற்று இடிந்து விழுந்தது.
திடீர் கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, 70 மீ நீளமும் 12 மீ அகலமும் கொண்ட அந்தப் பாலத்தின் ஒரு தூண் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து, பாலம் இடிந்து விழுந்தது.
இந்த சம்பவம் குறித்து பேசிய விசாரணை அதிகாரி துஷார் சிங்க்ளா, `மகாநந்தா பகுதியில் உள்ள சிறிய குடியிருப்புப் பகுதியான மடியாவை கரைப் பகுதியோடு இணைக்கும் வகையில் கன்காய் ஆற்றின் மீது கடந்த 2011-ம் ஆண்டு கட்டப்பட்டது இந்தப் பாலம். ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நேபாளத்தின் பெய்துவரும் கனமழையால் ஆற்றில் நீர்வரத்து அளவுக்கு அதிகமானது. நீரின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆற்றின் ஒரு தூண் அடித்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை’ என்று தெரிவித்தார்.
இதேபோன்று பாலம் இடிந்துவிழுந்த 3 சம்பவங்கள் கடந்த வாரத்தில், அராரியா, சைவான் மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த 2 சம்பவங்களையும் சேர்த்து கடந்த 11 நாட்களில் 5 பாலங்கள் இடிந்துவிழுந்துள்ளன. இது பீகார் பொதுப்பணித்துறையின் தரமற்ற பணிகளையே காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.