india
இது என் ஏரியா இல்லை… அரசியலில் இருந்தே விலகும் பாய்சங் பூட்டியா!
தேர்தல் அரசியலில் இருந்து முற்றிலும் விலகுவதாக இந்திய கால்பந்து அணி முன்னாள் வீரரரும் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் துணைத் தலைவருமான பாய்சங் பூட்டியா அறிவித்திருக்கிறார்.
பாய்சங் பூட்டியா
இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான பாய்சங் பூட்டியா, கடந்த 2014-ம் ஆண்டு அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தார். மேற்குவங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸில் மம்தா பானர்ஜி முன்னிலையில் அவர் இணைந்த நிலையில், அக்கட்சியின் டார்ஜிலிங் மக்களவைத் தொகுதி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார்.
2018-ல் தனது சொந்த மாநிலமான சிக்கிம் மாநில அரசியலுக்கு வந்த அவர் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி ஹம்ரோ சிக்கிம் கட்சியைத் தொடங்கினார். தனிக்கட்சி நடத்தி வந்த அவர், கடந்த ஆண்டு பவன் சாம்ளிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணியில் தன்னுடைய கட்சியை இணைத்தார்.
2024 தேர்தலில் பார்ஃபங்க் தொகுதியில் போட்டியிட்ட பாய்சங் பூட்டியா, சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சியின் வேட்பாளர் ரிக்சல் தோர்ஜி பூட்டியாவிடம் தோல்வியடைந்தார். தேர்தல் அரசியலில் இது அவரது ஆறாவது தோல்வியாகும்.
இந்தநிலையில், அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் பாய்சங் பூட்டியா. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியமைத்திருக்கும் பி.எஸ்.டமங்க் மற்றும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் அவர்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், `2024 தேர்தலுக்குப் பிறகுதான் தேர்தல் அரசியல் நமக்கானது இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். அதனால், அனைத்துவிதமான தேர்தல் அரசியலில் இருந்தும் உடனடியாக விலகிக் கொள்கிறேன்’ என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.