Connect with us

latest news

Budget 2024… தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?!

Published

on

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், பட்ஜெட்டை ஒட்டி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. கடந்த ஜூன் 22-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த மத்திய பட்ஜெட்டுக்கான ஆயத்த பணிகள் கூட்டத்தில் பங்கேற்று தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த கோரிக்கைகளை அவரிடம் முன்வைத்து மனு அளித்தார்.

அதில் கூறப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்கள்:

* சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.63,246 கோடியும், இயற்கை பேரிடர் நிதியாக ₹3,000 கோடியும் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

* மாதவரம் – சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பைபாஸ், மற்றும் மாதவரம் -சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்துக்காகக் கடந்த ஏப்ரல் 2017-ல் கொள்கை ரீதியிலான ஒப்புதலையும், அடுத்தடுத்த ஆண்டுகளில் நிர்வாக அனுமதியையும் வழங்கி, JICA, ADB, AIIB மற்றும் NDB போன்ற சர்வதேச நிறுவனங்களிடமிருந்து தமிழ்நாடு அரசு நிதியுதவியைப் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 2021-ல் பொது முதலீட்டு வாரியத்தின் ஒப்புதல் இருந்தபோதிலும், இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது

இத்திட்டத்திற்கு 50% நிதியை வழங்க வேண்டிய மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தாலும், நிதி நெருக்கடிக்கு மத்தியில் கடந்த நிதியாண்டில் 9,000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசே செலவு செய்தது. இந்த நிதியாண்டில் மெட்ரோ திட்டத்துக்கான நிதி ரூ.12,000 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தைப் போல, 2-ம் கட்டத்திற்கும் 50% நிதியை மத்திய அரசு வழங்கும் முடிவுக்காக தமிழ்நாடு அரசு காத்துக் கொண்டிருக்கிறது

* பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ் ஒரு யூனிட்டுக்கு ₹1.5 லட்சம் மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது, அதே நேரத்தில் மாநில அரசு ஒரு யூனிட்டுக்கு ₹7.5 லட்சம் முதல் ₹13 லட்சம் வரை வழங்குகிறது. மத்திய அரசின் நிதி பங்கை உயர்த்தி அளிக்கவும் தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

* ஓய்வூதிய திட்டத்துக்கான மத்திய அரசின் பங்கு ₹200-₹300 வரை மட்டுமே இருக்கிறது என்றும், மாநில அரசு ஒரு பயனாளிக்கு மாதம் ₹1,200 வரை வழங்கி வருவதாக தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியுள்ளது

* மாநிலங்கள் வரிப் பகிர்வில் நியாயமான பங்கைப் பெறுவதை உறுதி செய்ய, அடிப்படை வரி விகிதங்களுடன் செஸ்(Cess) மற்றும் கூடுதல் கட்டணங்களை (Subcharges) இணைக்கும்படியும் மத்திய அரசை தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: குடிமகன்கள் கவனத்திற்கு… செப்டம்பர் முதல் தமிழ்நாடு மது கடைகளில்… தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு..!

google news