india
இன்டர்ன்ஷிப் முதல் பத்திரப்பதிவு கட்டண குறைப்பு வரை… பட்ஜெட்டில் முதல் முக்கிய அம்சங்கள்…
மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வரும் நிலையில் வெளியாகி இருக்கும் முதல் சில முக்கியமான அறிவிப்புகள் குறித்த தகவல்களை இங்கு தொகுப்பாக பார்க்கலாம்.
4.1 கோடி இளைஞர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படவுள்ளது. மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மீதான மக்களின் நம்பிக்கை தான் 3வது தேர்தல் வெற்றி என்றும், நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலவச உணவு தானியம் வழங்கும் ‘பிஎம் கரீப் அன்ன யோஜனா’ திட்டம் 80 கோடி மக்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நீட்டிக்கப்படும். வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு 1.52 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் அதிகமாக விவசாயத்தில் உற்பத்தித்திறன் மற்றும் பின்னடைவு, வேலைவாய்ப்பு மற்றும் திறன், மேம்பட்ட மனித வளம், சமூக நீதி, உற்பத்தி மற்றும் சேவைகள், நகர்ப்புற வளர்ச்சி, ஆற்றல் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, புதுமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் ஆகியவைகளில் அதிக கவனம் செலுத்தப்பட இருக்கிறது.
உயர்கல்விக்காக உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் 10 லட்சம் வரை கல்வி கடனை அரசு வழங்கும். பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில வளர்ச்சிக்காக 15000 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள், விரைவுச் சாலைகள் அமைக்க பட்ஜெட்டில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்ரா கடன் உதவித் திட்டத்தில் கடன் தொகை 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் டாப் 500 நிறுவனங்களில் 5000 ரூபாய் இன்டன்ஷிப்பில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுக்கப்பட இருக்கிறது. மாநில அரசுகள் பத்திரப்பதிவுக்கு வகுத்து இருக்கும் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் ஒன்றிய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி இருக்கிறார்.