india
மத்திய பிரதேசத்தில் நாளுக்கு 28 பெண்கள், மூன்று சிறுமிகள்.. அதிர்ச்சி தரும் தகவல்…
ஆளும் பாஜக அரசு ஒவ்வொரு முறையும் பெண்களுக்கு ஆதரவாக பல நலத்திட்டங்களை வழங்குவதாக பேசுகிறது. மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்திருக்கும் போது பிரதமர் நரேந்திர மோடி பெண் சக்தி என்று நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துகிறார்.
ஆனால் இந்த 10 வருடத்தில் பெண் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. பாலியல் வன்புணர்வு தொடங்கி கொலை என பெண்கள் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே இருப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக, மத்திய பிரதேசம் காணாமல் போன பெண்கள் குறித்தும், அதை அரசு எவ்வாறு கையாளுகிறது குறித்தும் கொடுக்கப்பட்டு இருக்கும் தகவல் நாட்டையே உலுக்கி இருக்கிறது. மத்திய பிரதேச சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூலை1ல் தொடங்கி 19ந் தேதி வரை நடக்கும் எனக் கூறப்படுகிறது.
இக்கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பாலா பக்சன் மத்திய பிரதேசத்தில் காணாமல் போகும் பெண்கள் குறித்து கேள்வி எழுப்பி பேசி இருந்தார். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, 2021 முதல் 2024 வரை 28,857 பெண்கள், 2944 சிறுமிகள் இதுவரை காணவில்லை.
அதாவது, ஒரு நாளைக்கு சராசரியாக 28 பெண்களும், 3 சிறுமிகளும் காணாமல் போகின்றனர். ஆனால் இதுவரை அம்மாநிலத்தில் பெண்கள் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக இதுவரை 724 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பல மாவட்டங்களில் நூறுக்கும் அதிகமான பெண்கள் காணாமல் போன நிலையில் 10க்கும் குறைந்த வழக்குகளே பதியப்பட்டு இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.