india
சூப்பர்மேனாக யாரும் முயற்சிக்கக் கூடாது… மோடியைத் தாக்கினாரா மோகன் பகவத்?
எப்போதும் ஒருவர் தன்னை மனிதர்களை விட உயர்ந்த இடத்தில் வைத்து சூப்பர் மேனாக முயற்சிக்கக் கூடாது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிஜேபி – ஆர்எஸ்எஸ் இடையில் சமீபகாலமாக கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. பிரதமர் மோடி என்கிற தனி மனிதரின் பிம்பத்தை மட்டுமே பிஜேபி கட்டமைப்பது ஆர்எஸ்எஸ் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.
மேலும், உ.பியில் யோகி ஆதித்யநாத்தை மாற்ற வேண்டும் என்று கேசவ் மௌரியா முயற்சித்தும் அதற்கு ஆர்எஸ்எஸ் தலைமை முட்டுக்கட்டை போட்டதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடிக்கு எதிரான நடவடிக்கையாகவே இதை அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள். இந்தநிலையில், ஜார்க்கண்டின் கும்லா என்கிற கிராமத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தன்னார்வ தொண்டு நிறுவனமான விகாஸ் பார்தி ஏற்பாடு செய்திருந்த கிராம அளவிலான தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய மோகன் பகவத், `சுய வளர்ச்சியின் அடுத்தகட்டமாக ஒரு மனிதர், தான் சூப்பர் மேனாக வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதையும் தாண்டி விஸ்வரூபமெடுக்கவும் நினைப்பார்கள். ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது நாம் யாருக்கும் தெரியாது’ என்று பேசினார்.
மேலும், `மனித குல வளர்ச்சிக்காக நாம் தொடர்ச்சியாகப் பாடுபடும்போது வளர்ச்சி என்பதற்கு முடிவில்லாமல் இருக்கும். சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் நாம் தொடர்ச்சியாகப் பாடுபட வேண்டும். இந்தியாவின் இயற்கையைப் போல இந்த உலகையும் அழகான இடமாக மாற்ற நாம் அனைவரும் இணைந்து தொடர்ச்சியான உழைப்பைக் கொடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.