india
தொடரும் குழப்பம்… முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு – காங்கிரஸ், திமுக கண்டனம்!
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பால் எண்ணற்ற மாணவர்கள் கடும் விரக்தியில் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
நீட் தேர்வு குளறுபடி, நெட் தேர்வு ரத்து என தேசிய தேர்வு முகமை நடத்திய தேர்வுகள் அடுத்தடுத்து சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. இந்தநிலையில், இன்று நடைபெறுவதாக இருந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு திடீரென அறிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, `பாஜக ஆட்சியில் மாணவர்கள், தங்கள் எதிர்காலத்தைக் காப்பாற்ற அரசுடன் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்துக்கு மோடி அரசு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது’ என்று கண்டித்திருக்கிறார்.
அதேபோல், முதுநிலை நீட் தேர்வு ரத்துக்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதுநிலை நீட் தேர்வு ரத்தால் எண்ணற்ற மாணவர்கள் விரக்தியடைந்திருப்பதாகவும் யுஜிசி நெட் தேர்வைத் தொடர்ந்து முதுநிலை நீட் தேர்வும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.