india
பாஜகவுக்கு எதிராக ராகுல்காந்தி பேசிய பல வரிகள் நீக்கம்!.. சபாநாயகர் நடவடிக்கை…
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியை அமைத்திருக்கும் நிலையில் காங்கிரஸ் எதிர்கட்சியாக அமர்ந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி பாஜக மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்தார். பல முக்கிய விஷயங்கள் குறித்து அவர் பேசினார். அவரின் பேச்சு அனல் பறந்தது.
என்னிடம் நிமிர்ந்து கை குலுக்கும் சபாநாயகர் மோடியிடம் தலை வணங்கி கை குலுக்குவது ஏன்?.. மணிப்பூர் பிரச்சனைக்கு காரணமே பாஜகதான். மணிப்பூரில் உள்நாட்டு கலவரம் மூளும் சூழ்நிலைக்கு பாஜக தள்ளியது. வன்முறை ஏற்பட்ட மணிப்பூருக்கு மோடியும் அமித்ஷாவும் ஏன் செல்லவில்லை?’ என அவர் கேள்வி எழுப்பினார்.
அக்னி வீரர் திட்டத்தில் சேருபவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுவதில்லை. அக்னி வீரர் ஒருவர் ராணுவத்தில் உயிரிழந்தால் இழப்பீடு தரப்படுவதில்லை என சொன்ன ராகுல், பிரதமர் மோடி கடவுளுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கிறார். அவரால் நேரடியாக கடவுளுடன் பேச முடியும். பரமாத்மா நேரடியாக மோடியிடம் பேசுவார். அப்படிப்பட்ட மோடி கடவுளிடம் கேட்டுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டாரா?’ என கேட்டார் ராகுல்.
மேலும், மோடிக்கு பயந்து பாஜக தலைவர்கள் எனக்கு வணக்கம் கூட தெரிவிப்பதிலை. பாஜக தலைவர்களை கூட மோடி பயமுறுத்தி வைத்திருக்கிறார். இவ்வளவு பேசும் மோடி காந்தி இறந்துவிட்டதாக சொல்கிறார். சினிமா மூலம்தான் காந்தி மக்களிடம் அறியப்பட்டார் என அவர் சொல்வது எவ்வளவு பெரிய அறியாமை. இந்துக்கள் என தன்னை கூறிக்கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு பற்றி மட்டுமே பேசுகிறார்கள். இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களை பரப்பும் மதம் அல்ல. ஆனால், பாஜக 24 மணி நேரமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. உண்மையான இந்துக்கள் வெறுப்புணர்வை தூண்ட மாட்டார்கள் என ராகுல் காந்தி பேசியிருந்தார்.
இந்நிலையில், நேற்று பாராளுமன்றத்தில் பாஜவுக்கு எதிராக ராகுல் காந்தி பேசிய பலவரிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என சபாநாயகர் ஓம் பிர்லா கூறியிருக்கிறார். சிறுபான்மை மக்களுக்கு எதிரானது பாஜக, அதானி, அம்பானி மீதான விமர்சனம், நீட் தேர்வு வணிகமயம் ஆகிவிட்டது என அவர் சொன்ன குற்றச்சாட்டு, அக்னிபாத் திட்டம் ராணுவத்திற்கானது அல்ல அது பிரதமர் அலுவலகத்திற்கானது என ராகுல் காந்து பேசிய வரிகள் நீக்கம் செய்யப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.