latest news
த.வெ.க: 2 வண்ணக் கொடி… 3 தலைவர்கள்!.. விஜய் பிளான் இதுதானா?
தமிழக வெற்றிக்கழகத்துக்கு இருவண்ணக் கொடியோடு கொள்கை தலைவர்களாக மூன்று பேரை விஜய் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் திடீரென அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தல்தான் குறிக்கோள் என்று அறிவித்த விஜய், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் போட்டியிடாத விஜய்யின் தமிழ்நாடு வெற்றிக் கழகம், அந்தத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவில்லை என்று அறிவித்தது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேலைகளை கோட் பட ரிலீஸுக்குப் பின் விஜய் முடுக்கிவிட இருப்பதாகக் கூறப்படுகிறது. மாநாடு, நடைபயணம் என அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தும் திட்டம் விஜய்யிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அதற்கு முன் கட்சியின் கொடி மற்றும் கொள்கைகளை அறிவிக்க இருக்கிறார் விஜய். ஏற்கனவே திருவான்மியூரில் நடந்த கல்வி விருது வழங்கும் நிகழ்வில், `மாணவர்கள் அனைவரும் பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகிய தலைவர்களை பற்றி படித்து தெரிந்துகொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தியிருந்தார்.,
அதன்படி இந்த மூன்று தலைவர்களையும் கொள்கைத் தலைவர்களாக முடிவெடுத்து அவர்களின் கொள்கைகளின் வழி தனது கட்சிக் கொள்கைகளையும் அவர் அறிவிப்பார் என்கிறார்கள் த.வெ.க நிர்வாகிகள். கொடியைப் பொறுத்தவரை இரு வண்ணக் கொடி என்று முடிவு செய்திருப்பதாகவும், அதில் ஒரு நிறம் மஞ்சள் மற்றொரு நிறம் கருஞ்சிவப்பு அல்லது நீலமாக இருக்கலாம் என்று தெரிகிறது.