பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கும் ஈரான்.. பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப் எச்சரிக்கை.. பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்றால் நிபந்தனைகளை ஏற்றுக்கொள் என டிரம்புக்கு ஈரான் எச்சரிக்கை.. இன்று பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றால் நாளை முதல் மீண்டும் போர் தான்..

இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருக்கும் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒரு நாள் முன்னதாக, வாஷிங்டனும் தெஹ்ரானும் ஓர் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் தெரிவித்துள்ளார்.

இன்று அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன. இருப்பினும், இந்த தூதுக்குழுவில் அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் பங்கேற்பாரா என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. முன்னதாக ஏப்ரல் 11-12 தேதிகளில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை 20 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தும் எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இன்று நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து ஈரான் சபாநாயகர் தனது சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளார். பேச்சுவார்த்தையில் சில விஷயங்களில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டாலும், பல முக்கிய விவகாரங்களில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில், அமெரிக்கா தனது துறைமுகங்கள் மீது கடற்படை முற்றுகையை தொடர்ந்து பராமரித்து வருவதால், “நம்பிக்கை துரோகம்” என கூறி ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடப்போவதாக ஈரான் அறிவித்தது. முன்னதாக, இந்த நீர்வழிப்பாதை வழியாக செல்லும் கப்பல்கள் பாதுகாப்பு கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியிருந்தது.

தற்போது நிலவி வரும் மோதலில் மூன்று முக்கிய விவகாரங்கள் பெரும் தடையாக உள்ளன. முதலாவதாக, ஈரானின் யுரேனியம் கையிருப்பு குறித்த விவகாரம். ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிற்கு அனுப்ப ஒப்புக்கொண்டதாக அமெரிக்கத் தரப்பு கூறினாலும், ஈரான் அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டது. சுமார் 400 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருக்கும் ஈரான், அதற்கு ஈடாக 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களை விடுவிக்கவும், தடைகளை நீக்கவும் கோருகிறது.

இரண்டாவதாக, யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான காலக்கெடு குறித்த சர்ச்சை நீடிக்கிறது. அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் 20 ஆண்டுகால தடையை முன்மொழிந்த நிலையில், ஈரான் ஐந்து ஆண்டுகால தடையை மட்டுமே ஏற்க தயாராக உள்ளது. மூன்றாவதாக, உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த விவகாரம். ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டதால் உலக நாடுகள் மகிழ்ச்சியடைந்தன, ஆனால் அமெரிக்காவின் பொருளாதார முற்றுகை தொடர்வதால் ஈரான் மீண்டும் அங்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இந்த போர்ச் சூழல் உலகளாவிய சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடிகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் அவற்றின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இத்தகைய சூழலில், இஸ்லாமாபாத்தில் நடைபெறும் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை ஒரு தீர்வை கொண்டுவருமா அல்லது தோல்வியில் முடியுமா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. ஒருவேளை இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

Leave a Comment