அதிமுக எடப்பாடியின் அசைக்க முடியாத கோட்டை!.. திமுக ஆட்சிக்கு கவுண்டவுன் ஸ்டார்ட் – சி.வி. சண்முகத்தின் அனல் பறக்கும் பேச்சு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.வி. சண்முகம், தி.மு.க. ஆட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதாகக் கூறியதோடு, கட்சிக்குள் உள்ள ‘துரோகிகள்’ குறித்தும் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.

எடப்பாடியின் கோட்டை அசைக்க முடியாதது:

அதிமுகவை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்ற நிலையைத் தனது ஆளுமையால் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்துள்ளார்,” என்று அவர் எடப்பாடி பழனிசாமியைப் புகழ்ந்து பேசினார். “இன்னும் தேர்தலுக்கு 100 நாட்கள்தான் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதும் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது,” என்று சி.வி. சண்முகம் அறிவித்தார்.

திமுக-வைக் காட்டிலும் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள சிலரிடமிருந்து வரும் சவால்கள் குறித்தும் அவர் பேசியது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உறவாடும் துரோகிகள்:

“இன்று திமுக மட்டும் எதிரி அல்ல. நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடமும் நாம் கவனமாக இருக்க வேண்டும். துரோகிகளை கண்டுகொள்ள வேண்டும்,” என்று அவர் மறைமுகமாக ஒரு பிரிவினரைச் சாடினார்.

“அதிகாரம், ஆட்சி, பண பலத்தை மீறி அதிமுகவை நிலை நிறுத்துவோம்,” என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.தனது இந்தப் பேச்சின் மூலம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பலமாக உள்ளது என்பதையும், உட்கட்சிக்குள் ஏதேனும் சலசலப்புகள் இருந்தாலும் அவற்றை மீறி தேர்தல் களத்தைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் சி.வி. சண்முகம் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Comment