அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடா, தனக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தை அவருக்குப் பரிசாக வழங்கி உலகையே அதிர வைத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த ‘நோபல்’ பரிமாற்றம்:
வெனிசுலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடியதற்காக மரியாவுக்கு கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை மரியா சந்தித்துப் பேசினார். அப்போது, “வெனிசுலாவின் சுதந்திரத்திற்காக நீங்கள் காட்டிய உறுதியான அர்ப்பணிப்புக்கு அங்கீகாரமாக, எனது நோபல் பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன்” என்று கூறி ட்ரம்ப்பிடம் அந்தத் தங்கப் பதக்கத்தை ஒப்படைத்தார்.
குஷியான ட்ரம்ப்:
இந்தத் திடீர் பரிசைப் பெற்றுக் கொண்ட அதிபர் ட்ரம்ப், அதைப் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “மரியா ஒரு அற்புதமான பெண்மணி. நான் செய்த பணிக்காகத் தனது நோபல் பரிசை எனக்கு வழங்கியுள்ளார். இது ஒரு சிறந்த பரஸ்பர மரியாதை. நன்றி மரியா!” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தற்போது அந்தப் பதக்கம் ட்ரம்ப்பின் வசமே உள்ளது.
மெடல் என்ன சாக்லேட்டா? – நோபல் கமிட்டி அதிரடி:
ஆனால், இந்தப் பரிசுப் பரிமாற்றம் குறித்து நோபல் அறக்கட்டளை அதிகாரிகள் கறாரான விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர்.
“நோபல் பரிசு என்பது ஒரு தனிநபரின் சாதனைக்காக வழங்கப்படுவது. அதை மற்றவருக்கு மாற்றவோ அல்லது பகிரவோ சட்டப்படி இயலாது. பதக்கத்தை மரியா யாரிடம் வேண்டுமானாலும் கொடுக்கலாம், ஆனால் அதிகாரப்பூர்வமாக அந்தப் பரிசு மரியா பெயரிலேயே நீடிக்கும். ட்ரம்ப் அந்தப் பதக்கத்தை வைத்திருப்பதால் அவர் நோபல் வெற்றியாளராக முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.