ஓட்டுக்கு பணம் வாங்குவது கேவலம் என நினைத்தது அந்த காலம்.. ஓட்டுக்கு பணம் வேண்டும் என போராடி வாங்குவது இந்த காலம்.. 1000 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை பட்டுவாடா.. தங்க நாணயம், வெள்ளி கொலுசு, QR Code உடன் டோக்கன்.. ஜனநாயக கேலிக்கூத்து தான் இந்த தேர்தல்..!

தமிழகத் தேர்தல் வரலாற்றில் முன்சொன்னிராத ஒரு கருப்பு பக்கமாக, இந்த தேர்தலில் ஏறத்தாழ 15,000 கோடி ரூபாய் அளவுக்கு பணப்புழக்கம் இருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களை கவர பணத்தை வாரி இறைத்துள்ளன. சராசரியாக ஒரு வாக்குக்கு 1,000 ரூபாய் என தொடங்கப்பட்ட இந்தப் பட்டுவாடா, சில முக்கியத் தொகுதிகளில் கற்பனை செய்ய முடியாத உச்சத்தைத் தொட்டுள்ளது. குறிப்பாக, கோவை தெற்கு மற்றும் கரூர் போன்ற நட்சத்திரத் தொகுதிகளில் ஒரு வாக்குக்கு 8,500 ரூபாய் வரை அளிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் மாண்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

கரூர் சட்டமன்றத் தொகுதியில் நடந்த பணப் பட்டுவாடா குறித்து ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் பகிர்ந்த தகவல்கள் மிரள வைக்கின்றன. அங்கு திமுக தரப்பு முதற்கட்டமாக 6,000 ரூபாயையும், அதனைத் தொடர்ந்து அதிமுக 3,000 ரூபாயையும் விநியோகித்துள்ளன.

இரண்டாம் கட்டமாக மீண்டும் திமுக தரப்பில் 2,500 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. சுமார் இரண்டு லட்சம் வாக்காளர்களை கொண்ட இந்த ஒரு தொகுதியில் மட்டும், பிரதான இரு கட்சிகளும் ஓட்டுக்காகச் செலவிட்ட தொகை 200 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. இது தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு வளையத்தையெல்லாம் தாண்டி, ஒரு நிழல் உலக பொருளாதாரமே அங்கு இயங்கியதைக் காட்டுகிறது.

பணமாக கொடுப்பதையும் தாண்டி, தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களாகவும் வாக்காளர்களுக்குப் பரிசு மழை பொழியப்பட்டுள்ளது. கோவை தெற்குத் தொகுதியில் ஒரு கிராம் தங்கக்காசும், திருச்சி மற்றும் பரமத்திவேலூர் பகுதிகளில் வெள்ளிக் கொலுசுகளும் தாராளமாக விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் புதுமையாக கோவை வடக்குத் தொகுதியில், உதயசூரியன் சின்னம் பொறித்த QR Code அடங்கிய டோக்கன்கள் வழங்கப்பட்டு, தேர்தல் முடிவுக்குப் பின் தங்க நாணயம் தரப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் ஒரு சுயேச்சை வேட்பாளர் ஒருபடி மேலே சென்று தங்க மூக்குத்தியை வழங்கியிருப்பது, அதிகாரத்தைக் கைப்பற்ற எந்த எல்லைக்கும் செல்லத் துணியும் அரசியல் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது.

குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் பொறுப்பில் இருந்த 39 தொகுதிகளில் ஒரு வாக்குக்குச் சராசரியாக 2,500 ரூபாய் வரை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 84 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்புமே 2,000 ரூபாய்க்கும் குறையாமல் பணத்தை இறைத்துள்ளன.

இவர்களுடன் போட்டிக்கு சசிகலா தரப்பு வேட்பாளர்களும் மன்னார்குடி போன்ற பகுதிகளில் 500 முதல் 1,000 ரூபாய் வரை விநியோகித்துள்ளனர். ஆனால், இந்த ஆக்ரோஷமான பணப் போட்டியில் நாம் தமிழர் கட்சி முற்றிலுமாக விலகி நின்றதுடன், தமிழக வெற்றிக் கழகமும் ஒரு சில இடங்களை தவிர வேறெங்கும் பண விநியோகத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையம் எவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்தாலும், 15,000 கோடி ரூபாய்க்கும் மேலாக பணத்தை இறைத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் இந்த போக்கு சமூக ஆர்வலர்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வாக்குக்கு இவ்வளவு பெரும் தொகையை செலவு செய்யும் கட்சிகள், ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்குச் சேவை செய்யுமா அல்லது தாங்கள் முதலீடு செய்த பணத்தை வட்டியும் முதலுமாக எடுக்க முயலுமா என்ற கேள்வி நியாயமாக எழுகிறது.

ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்கள் பண பலத்தால் ஆட்டம் காணும் இந்த அவல நிலை, வருங்காலத் தலைமுறையினரின் அரசியல் விழிப்புணர்வால் மட்டுமே மாற்றப்பட முடியும் என்பதே கசப்பான உண்மையாகும்.

Leave a Comment