முன்னாடி எல்லாம் தேர்தல்னா வீதிக்கு வருவாங்க… இப்ப எல்லாம் விரல் நுனிக்கு வந்துட்டாங்க! ஆனா ஒன்னு ஞாபகம் வச்சுக்கோ… ஸ்கிரீன்ல காட்டுறது எல்லாம் கிராபிக்ஸ், களத்துல காட்டுறது தான் ரியல் மேஜிக்.. ரீல்ஸ் பார்த்து ஓட்டு போடலாம்ன்னு நினைக்காதீங்க… இது 15 செகண்ட்ல முடியுற சினிமா இல்ல, அஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை வர்ற மக்களோட தீர்ப்பு

2026 தமிழகச் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் தெருக்களில் இருந்து டிஜிட்டல் திரைகளுக்கு வேகமா நகர்ந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்கள் ஒரு இணை பிரச்சார களமாக மாறியுள்ளன. அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களின் சித்தாந்தங்களை நிலைநாட்டவும், எதிர்த்தரப்பு பிம்பங்களை சிதைக்கவும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றன. தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய பாரம்பரிய கட்சிகளுடன், விஜய்யின் த.வெ.க மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் ஆன்லைன் போரில் தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக, முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் இந்த டிஜிட்டல் போர் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைவர்களின் உரைகளை ஏஐ மூலம் உருவாக்குவது முதல், மறைந்த தலைவர்களின் குரல்களை மீண்டும் ஒலிக்க செய்வது வரை பல்வேறு உத்திகள் கையாளப்படுகின்றன. இருப்பினும், இதன் இருண்ட பக்கமாக டீப்ஃபேக் வீடியோக்கள் மற்றும் போலியான ஆடியோ கிளிப்புகள் வாக்காளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை விளைவித்து வருகின்றன. உண்மை எது, புனைவு எது என்று பிரித்தறிய முடியாத அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால், அரசியல் கட்சிகள் இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி எதிர்த்தரப்பு தலைவர்களின் பிம்பத்தை சிதைக்க முயற்சி செய்கின்றன. இது தார்மீக ரீதியாகவும் அறம் சார்ந்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஒவ்வொரு கட்சியும் தற்போது பிரத்யேகமான ‘வார் ரூம்களை’ அமைத்து, அதன் மூலம் சமூக வலைதளங்களின் போக்கை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. மக்களின் உணர்வுகளை கண்டறிதல், எதிர்மறையான கருத்துகளை எதிர்கொள்ளுதல் மற்றும் உள்ளூர் ரீதியாக தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கங்களை உருவாக்குதல் ஆகியவையே இந்த வார் ரூம்களின் முக்கிய பணியாகும். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகள் தற்போது தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக மாறியுள்ளன. சில மணிநேரங்களில் வைரலாகும் மீம்கள் மற்றும் குறுகிய கால வீடியோக்கள், நீண்ட கால அரசியல் மேடை பேச்சுகளை விட அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஏஐ தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு குறித்து மாநில தேர்தல் ஆணையம் கவலை தெரிவித்துள்ளதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை முறையாக பெயரிட வேண்டும் என்றும், தவறான மற்றும் ஆபாசமான டீப்ஃபேக் பதிவுகளை உடனடியாக நீக்கவும் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், சமூக வலைதளங்களின் பரந்து விரிந்த பரப்பில் ஒவ்வொரு பதிவையும் கண்காணிப்பது என்பது அதிகாரிகளுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. குறிப்பாக, ரகசியமான வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்படும் தவறான தகவல்கள் தேர்தல் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் மற்றும் இணைய பயன்பாடு தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று சேர்ந்துள்ள நிலையில், 2026 தேர்தல் என்பது ஆன்லைன் பிம்பங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் முதல் தேர்தலாக அமையக்கூடும். ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், மே 4-ம் தேதி வெளியாகும் முடிவுகள் இந்த டிஜிட்டல் போரின் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும். பாரம்பரியமான வீதி பிரச்சாரங்களை காட்டிலும், டிஜிட்டல் திரைகளில் செய்யப்படும் மாயாஜாலங்கள் வாக்காளர்களின் விரல் நுனியில் எத்தகைய மாற்றத்தை கொண்டு வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment