தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அரசியல் களம் பெரும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தலில் பின்னடைவை சந்தித்த நிலையில், அவர் மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழைந்தால் மட்டுமே கட்சிக்கு அது நல்ல பலனை தரும் என்று திமுகவின் அடிமட்ட தொண்டர்களும் திருச்சி மாவட்ட நிர்வாகிகளும் தீவிரமாக விரும்புகின்றனர். தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்கள் ராஜினாமா செய்துள்ள திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவிருப்பதால், அந்த தொகுதியில் ஸ்டாலின் அவர்கள் நேரடியாக போட்டியிட வேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி கிழக்கு தொகுதியில் திமுகவுக்கு வலுவான வாக்கு வங்கி இருப்பதாலும், அங்குள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் “நாங்கள் உங்களை முழு பொறுப்பேற்று ஜெயிக்க வைத்து காட்டுகிறோம்” என்று ஒற்றைக்காலில் நிற்பதாலும் இந்த யோசனை திமுக வட்டாரத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்திற்குள் எதிர்க்கட்த் தலைவராக அமர்வது மட்டுமே தற்போதைய ஆளுங்கட்சியின் அதிரடி ஆட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட உதவும் என்று திமுக நிர்வாகிகள் நம்புகின்றனர். இதற்காகத் திருச்சி மாவட்டத்தின் முக்கியப் புள்ளிகள் இப்போதே வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டனர்.
இருப்பினும், மு.க.ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான கட்சியின் மூத்த தலைவர்களும் அரசியல் ஆலோசகர்களும் இந்த முடிவுக்கு முற்றிலும் மாறுபட்ட எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் அவசரப்பட்டு இடைத்தேர்தல் களத்தில் இறங்குவது பெரும் ஆபத்தாக முடியலாம் என்று அவர்கள் பயப்படுகின்றனர். ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலில் எதிர்பாராத விதமாகத் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், மீண்டும் ஒருமுறை இடைத்தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தால், அது அவரது ஒட்டுமொத்த அரசியல் எதிர்காலத்தையே சூன்யமாக்கிவிடும் என்று அவர்கள் மிக வெளிப்படையாகவே ஸ்டாலினுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
இதற்கு மிக முக்கியமான காரணமாக அரசியல் ஆலோசகர்கள் சுட்டிக்காட்டுவது, தமிழ்நாட்டில் இன்னும் ஓயாமல் இருக்கும் “தவெக அலை” தான். புதிய ஆட்சி அமைந்த பிறகும் மக்கள் மத்தியில் அந்தப் பார்ட்டிக்கான ஆதரவும் முதல்வர் விஜய் மீதான ஈர்ப்பும் குறையாமல் அப்படியே நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் இன்னும் எத்தனை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தாலும், ஆளுங்கட்சியான தவெக-தான் தங்களின் முழுப் பலத்தையும் இறக்கி வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளப் பார்க்கும் என்றும், அதனால் தற்போதைக்கு திமுகவுக்குச் சாதகமான சூழல் இல்லை என்றும் அவர்கள் யதார்த்த நிலையை விளக்குகிறார்கள்.
மேலும், கட்சிக்குள்ளும் தலைமையைச் சுற்றிலும் எப்போதுமே “சூழ்ந்திருக்கும் ஜால்ரா கூட்டத்தை” நம்பி எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்க வேண்டாம் என்றும் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் கறாராகக் கூறியுள்ளனர். கள நிலவரம் தெரியாமல் “தலைவரே நின்றால் நிச்சயம் ஜெயித்துவிடலாம்” என்று மேடைகளிலும் கூட்டங்களிலும் ஐஸ் வைக்கும் நபர்களின் பேச்சைக் கேட்டுத் தேர்தலை எதிர்கொண்டால் அது மீண்டும் ஒரு பின்னடைவுக்கே வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தொண்டர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டியவை என்றாலும், தற்போதைய அரசியல் சூழலில் நிதானமும் ராஜதந்திரமும் தான் மிக முக்கியம் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த இருதரப்பு அழுத்தங்களுக்கு நடுவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது கடுமையான அரசியல் குழப்பத்திலும், சிந்தனையிலும் ஆழ்ந்துள்ளார். ஒருபுறம் சட்டமன்றத்திற்குள் சென்று தவெக அரசுக்குச் சவால் விட வேண்டும் என்ற தொண்டர்களின் ஆசை, மறுபுறம் அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நெருக்கமானவர்களின் எச்சரிக்கை என இருமுனை கத்தியின் மேல் அவர் நிற்கிறார். வரவிருக்கும் இந்தத் திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் போட்டியிடுவதா அல்லது தற்போதைக்கு ஒதுங்கியிருந்து கட்சியைப் பலப்படுத்துவதா என்ற இறுதி முடிவை அவர் எப்படி எடுக்கப்போகிறார் என்பதை ஒட்டுமொத்தத் தமிழக அரசியல் உலகமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.