CMDAக்கு என்ன வேலை கொடுக்கப்பட்டதோ, அதை பார்க்காமல் கட்டிடம் கட்டும் பணியை பார்த்தது ஏன்? 3000 கோடி ரூபாயை செலவு செய்து இப்ப 1500 கோடி பற்றாக்குறையில் வந்து நிற்குது.. இனிமே CMDA எந்த கட்டிடத்தையும் கட்டாது.. அதுக்கு தான் வீட்டு வசதி துறை இருக்குதுல்ல, அது பார்த்துக்கிடும்… தவெக அரசு போட்ட அதிரடி உத்தரவு…

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள மிக முக்கியமான முடிவுகள் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளன. இதன்படி, இதுவரை தனி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்த CMDA, மீண்டும் வீட்டுவசதித் துறையின் நேரடி கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, ஒரு திட்டமிடும் அமைப்பாக செயல்பட வேண்டிய CMDA, கட்டுமான பணிகளில் இறங்கியதால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சரிசெய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கட்டுமான பணிகளுக்காக சுமார் 3,000 கோடி ரூபாய் அளவுக்கு CMDA செலவிட்டுள்ளது. இதன் விளைவாக, நீண்ட காலமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த வருவாய் மற்றும் வட்டி வருமானம் என அனைத்தும் முற்றிலுமாக செலவிடப்பட்டு, தற்போது 1,500 கோடி ரூபாய் அளவுக்கு அந்த அமைப்பு நிதி பற்றாக்குறையில் இருப்பதாக சமீபத்திய ஆய்வு கூட்டத்தில் தெரியவந்துள்ளது. இந்த நிதி நெருக்கடிக்கு, அந்த அமைப்பு தனது முதன்மை பணியை தவிர்த்துவிட்டு முழுநேர கட்டுமான பணிகளில் ஈடுபட்டதே முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்ணா நகர், கோயம்பேடு, விருகம்பாக்கம் மற்றும் ஓ.எம்.ஆர் போன்ற புகழ்பெற்ற குடியிருப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய CMDA, கடந்த ஐந்து ஆண்டுகளாக அத்தகைய திட்டமிடல் பணிகளில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. திருமழிசையில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டத்தை தவிர, புதிய குடியிருப்பு திட்டங்கள் அல்லது நிலப்பயன்பாட்டு திட்டங்கள் எதுவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்படவில்லை. ஒரு திட்டமிடும் அமைப்பாக செய்ய வேண்டிய அடிப்படை பணிகளை விட்டுவிட்டு, கட்டுமான பணிகளில் இறங்கியது அந்த அமைப்பின் அடிப்படை நோக்கத்தையே சிதைத்துவிட்டது.

CMDA-விடம் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு தேவையான தகுதியான பொறியாளர்கள் அல்லது தனிப்பட்ட செயல்திறன் கொண்ட அமைப்பு இல்லை என்பது முக்கியக் குறையாக கூறப்படுகிறது. கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு, அவற்றை முறையாக பராமரிக்கவோ அல்லது தரத்தை ஆய்வு செய்யவோ போதிய வசதிகள் இல்லாத நிலையில், இந்த அமைப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டது நிர்வாக ரீதியாக பெரும் சவால்களை உருவாக்கியுள்ளது.

இனிவரும் காலங்களில், CMDA தனது கட்டுமான பணிகளை முழுமையாக நிறுத்திவிட்டு, நகர்ப்புற திட்டமிடல், திட்டங்களுக்கான அனுமதி வழங்குதல், குடியிருப்பு மற்றும் வணிக லே-அவுட்களை உருவாக்குதல் போன்ற தனது அடிப்படை பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இனி எந்தவொரு புதிய கட்டுமான பணிகளிலும் CMDA ஈடுபடாது என்றும், மீண்டும் பழையபடி வீட்டுவசதி துறையின் வழிகாட்டுதலின்படி திட்டமிடும் அமைப்பாக மட்டுமே செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம், CMDA-வின் வருவாயை மீண்டும் உயர்த்த முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். நில ஒருங்கிணைப்பு திட்டங்கள்மற்றும் புதிய லே-அவுட் உருவாக்கங்கள் மூலம் வருவாயை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Comment