எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் இப்போது வரை தலைமறைவு? எங்கே போனார்? விலை போய்விட்டாரா அல்லது மிரட்டப்பட்டாரா? வேண்டுமென்றே தவறுகளுடன் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டாரா? சுயேட்சை வேட்பாளருக்கு அடித்த ஜாக்பாட்…!

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில், தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அருண்குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரம், அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்புமனுவில் 10 வாக்காளர்கள் வழிமொழிய வேண்டும் என்ற விதியை சுட்டிக்காட்டி, போதிய கையெழுத்துகள் இல்லாததால் அருண்குமார் மற்றும் அவரது மனைவியின் மனுக்களை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து, அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் எடப்பாடியில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து போட்டியிடவிருந்த தவெக வேட்பாளரின் மனு தள்ளுபடியானதன் பின்னணியில் அதிமுகவின் சதி இருப்பதாக அக்கட்சியினர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.

வேட்புமனு பரிசீலனையின்போது வேட்பாளர் அருண்குமார் திடீரென அங்கிருந்து மறைந்ததும், தவெக நிர்வாகிகள் அவரை தேடி அலைந்ததும் களத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அருண்குமார் அதிமுகவினரால் கடத்தப்பட்டதாக தவெக தரப்பில் புகாரளிக்கப்பட்ட நிலையில், குறுக்கு வழியில் வெற்றிபெற நினைப்பவர்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என விஜய் அறிக்கை வெளியிட்டார். தனது வேட்பாளர் களத்தில் இல்லாத சூழலில், சுயேச்சை வேட்பாளரான பிரேம் குமாருக்குத் தனது ஆதரவை தெரிவித்த விஜய், அவரை தவெக வேட்பாளராகவே கருதி மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இது எடப்பாடி தொகுதியில் அதிமுகவிற்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்கும் ஒரு புதிய வியூகமாக பார்க்கப்பட்டது.

நாடார் சமுதாயத்தை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் பிரேம் குமார், தவெக-வின் இந்த திடீர் ஆதரவால் பெரும் உற்சாகமடைந்துள்ளார். பிரதான கட்சிகள் தங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதில்லை என்பதால் சுயேச்சையாகக் களம் கண்ட தனக்கு, அதிமுக தரப்பிலிருந்து வேட்புமனுவை திரும்பப் பெற சொல்லி மிரட்டல்கள் வந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தவெக தொண்டர்கள் வீடு வீடாக தமக்காக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டது, தனது வெற்றி வாய்ப்பை அல்லது வாக்கு எண்ணிக்கையை நிச்சயம் உயர்த்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விஜய்யின் ஆதரவு கிடைத்த கடைசி மூன்று நாட்களில் தொகுதியின் அரசியல் சூழல் தமக்கு சாதகமாக மாறியுள்ளதாக அவர் கருதுகிறார்.

உள்ளூர் தவெக நிர்வாகிகளோ இந்த விவகாரத்தில் அதிமுகவின் ‘செட்டில்மென்ட்’ அரசியல் இருப்பதாக கருதுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கில் இருந்ததாகவும், தவெக பிரிக்கக்கூடிய வாக்குகள் அதற்கு தடையாக இருக்கும் என்பதால் அருண்குமாரை விலைக்கு வாங்கி இத்தகைய சூழ்ச்சியை அரங்கேற்றியுள்ளதாகவும் அவர்கள் சாடுகின்றனர். அதிமுகவில் நீண்டகாலம் இருந்த அருண்குமாரை எளிதாக அணுகி, வேட்புமனுவில் வேண்டுமென்றே பிழைகளை செய்ய வைத்துள்ளனர் என்பது அவர்களின் வாதம். தவெக வழக்கறிஞர் அணியினரும் மனு தயாரிப்பின் போதே அதிமுக வழக்கறிஞர்களின் தலையீடு இருந்ததாக சந்தேகத்தை உறுதிப்படுத்துகின்றனர்.

இந்தக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதிமுகவின் எடப்பாடி நகர செயலாளர் முருகன், தவெக-வின் வேட்பாளர் ஓடிப்போனதற்குத் தாங்கள் பொறுப்பல்ல என்றும், இது வெற்று விளம்பரத்திற்காக சொல்லப்படும் பொய் என்றும் பதிலடி கொடுத்துள்ளார். இருப்பினும், அருண்குமார் தற்போது வரை தலைமறைவாக இருப்பதும், அவர் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் வராததும் சந்தேகங்களை வலுப்படுத்துகின்றன. ஒரு வேட்பாளரை மிரட்டி அல்லது விலைக்கு வாங்கிப் பணிய வைப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என்ற கருத்து எடப்பாடி தொகுதி மக்களிடையே பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. தேர்தல் முடிவுகளில் இந்த ‘வேட்புமனு தள்ளுபடி’ விவகாரம் எந்த அளவிற்கு எதிரொலிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment