தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதந்தோரும் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று திமுக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்து இருந்தது. இதனை தொடர்ந்து ஆட்சியமைத்த திமுக இரண்டரை ஆண்டுகள் கழித்து கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ரேஷன் அட்டை வைத்திருக்கும் தகுதி வாய்ந்த பெண்கள் 1 கோடியே 14 லட்சம் பேர் இந்த திட்டத்தில் தற்போது பயன்பெற்று வருகின்றனர். இன்னும் பலர் தகுதி இருந்தும், இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்து, உரிமைத் தொகை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு ஆவலுடன் காத்துக் கிடக்கின்றனர்.
இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் வீடு வீடாக வினியோகம் செய்யப்பட உள்ளது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் மூலம் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று தொடங்கி மூன்று மாதங்கள் வரை நடைபெறும் இந்த பணியில் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுகின்றனர். இந்தத் திட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு எவ்வளவு பேருக்கு கூடுதலாக உரிமைத் தொகை வழங்க முடியுமோ, அவ்வளவு பேருக்கும் வழங்கப்படும் என்று அரசு தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறது.
மேலும் இத்திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியுள்ள அனைவருக்கும் அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குள் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்திற்கான நடவடிக்கைள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2023-ம் ஆண்டு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டதில் இருந்தே, தகுதிகள் இருந்தும் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என மாநிலம் முழுக்க பெண்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தனர். அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டு கூடுதல் பயனாளிகளை இணைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார்.
எனினும், இது தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ந்ததை அடுத்து, தகுதி இருந்தும் விடுபட்டுப் போன விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக மீண்டும் விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டு, தற்போது விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கப்படுகிறது. இந்த முறை தகுதி இருந்தும் உரிமைத் தொகை கிடைக்காத பலர் இந்தத் திட்டத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.