tech news
இது புதுசா இருக்குங்க.. பணம் கேட்டால், போட் வாட்ச் காட்டுங்க..!
போட் நிறுவன ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்துவோர் இனி, எளிதில் பணம் செலுத்தலாம். நாடு முழுக்க பாயின்ட்-ஆஃப்-சேல் (POS) முனையங்களில் பயனர்கள் போட் வாட்ச் அணிந்திருந்தால், அதை கொண்டே எளிதில் பணம் செலுத்தலாம். இதற்கு அவர்கள் டேப் அன்ட் பே வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பான அறிவிப்பு குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2024 நிகழ்வில் வெளியானது.
அதன்படி போட் நிறுவனம் மாஸ்டர்கார்டு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து புதுவித பணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்கிறது. கூட்டணியின் படி, ஆதரவு தரும் வங்கிகளின் மாஸ்டர்கார்டு பயன்படுத்துவோர் தங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை கொண்டு இந்த வசதியில் பயன்பெற முடியும். இதற்கான வசதி போட் அதிகாரப்பூர்வ செயலியின் மூலம் வழங்கப்படுகிறது. இதனை மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் டொகன்முறை மூலம் பாதுகாக்கப்படுகிறது.
பேமன்ட் வசதி கொண்ட போட் ஸ்மார்ட்வாட்ச்களை கொண்டு பாயின்ட்-ஆஃப்-சேல் முனையங்களில் பயனற்கள் டேப்-அன்ட்-பே முறையில் பணம் செலுத்த முடியும் என்று போட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சம் ரூ. 5,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு கடவுச்சொல் பதிவிட வேண்டிய அவசியமும் இல்லை. மாஸ்டர்கார்டின் டிவைஸ் டொகனைசேஷன் திறன் மற்றும் க்ரிப்டோகிராம்களால் இந்த பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக கையாளப்பட உள்ளன.
“மாஸ்டர்கார்டு உடன் எங்களது கூட்டணி மூலம் புதுவித கான்டாக்ட்லெஸ் பேமன்ட் முறைகளை விரும்பும் அதிகளவு நுகர்வோரை எங்களால் பெற முடியும்,” என போட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சமீர் மேத்தா தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னணி வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தும் மாஸ்டர்கார்டு பயனர்களுக்கு இந்த வசதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற வங்கிகளுக்கும் இந்த சேவை காலப்போக்கில் விரிவுப்படுத்தப்படும். இந்தியாவில் அணியக்கூடிய சாதனங்கள் பயன்பாடு 34 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளதைத் தொடர்ந்து இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது.