tech news
குட்டீஸ் ஸ்பெஷல்.. சேஃப்டி வசதிகளுடன் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்
போட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. போட் வேன்டரர் என்று அழைக்கப்படும் புது ஸ்மார்ட்வாட்ச் குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அவர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வசதிகளை இந்த ஸ்மார்ட்வாட்ச் வழங்குகிறது.
அதன்படி இந்த ஸ்மார்ட்வாட்ச்-இன் குறிப்பிடத்தக்க அம்சங்களாக 4ஜி மற்றும் வைபை கனெக்டிவிட்டி, பில்ட்-இன் ஜிபிஎஸ் சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வசதிகளை கொண்டு குழந்தைகள் எங்கு உள்ளனர் என்பதை டிராக் செய்ய முடியும்.
அம்சங்களை பொருத்தவரை போட் வேன்டரர் மாடலில் 1.4 இன்ச் HD டச் டிஸ்ப்ளே, உறுதியான பில்டு, IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இருவழி வீடியோ மற்றும் வாய்ஸ் கால் மேற்கொள்ளும் வசதி உள்ளது. வீடியோ கால் மேற்கொள்வதற்காக இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் 2MP கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இவைதவிர, இந்த மாடலில் ரியல்-டைம் லொகேஷன் டிராக்கிங், ஜியோ-ஃபென்சிங், பேரன்டல் கண்ட்ரோல், ஸ்டெப் டிராக்கிங் மற்றும் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 2 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். எனினும், 4ஜி மற்றும் ஜிபிஎஸ் பயன்பாடுகளை பொருத்து சார்ஜ் சற்று முன்கூட்டியே தீர்ந்து போகவும் வாய்ப்பு உண்டு.
புதிய போட் வேன்டரர் கிட்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடல் கேன்டி பின், சன்ஷைன் எல்லோ மற்றும் ஸ்கை புளூ என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 4,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் தளத்தில் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்வாட்ச்-க்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.