india
அமெரிக்க பாஸ்போர்ட்… இந்திய ஆதார் கார்டு… காட்டில் கட்டி வைக்கப்பட்டு இருந்த பெண்…
மஹாராஷ்ட்ராவை சேர்ந்த சிந்துதுர்க் மாவட்டத்தின் காட்டிற்குள் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கட்டிப்போட்டு இருந்தார். அவரை கண்டுபிடித்த காவல்துறை அப்பெண்ணிடம் அமெரிக்க பாஸ்போர்ட்டும், தமிழ்நாட்டு முகவரியில் ஆதார் கார்டும் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
அந்த மாவட்டத்திலிருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோனூர்லி கிராமத்தில் ஒரு ஆடு மேய்ப்பவருக்கு அந்தப் பெண்ணின் அழுகை சத்தம் கேட்டு இருக்கிறது. சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில், மன நலம் சரியில்லாமல் இருந்த அப்பெண்ணைக் கண்ட ஆடு மேய்ப்பவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
உடனடியாக மீட்கப்பட்ட அந்த பெண் சிந்துதுர்க்கில் அமைந்துள்ள சாவந்த்வாடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவரது மனநலம் மற்றும் உடல்நிலை காரணமாக, அவர் மேல் சிகிச்சைக்காக கோவா மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார். மருத்துவர்கள் கூறும்போது, அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், மனநலம் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
தமிழக முகவரியில் இருந்த ஆதார் அட்டை, காலாவதியான அமெரிக்க பாஸ்போர்ட்டின் நகல் அடிப்படையில் அந்த பெண் லலிதா கயி என அடையாளம் கண்டுள்ளனர். அந்த பெண் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் இருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்ணின் தற்போதைய நிலை, அவரால் என்ன நடந்தது என்பதை போலீசாரிடம் விவரிக்க முடியாமல் இருக்கிறது.
காவல் அதிகாரி கூறுகையில், அப்பெண் இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்துள்ளார். மேலும் அப்பகுதியில் கனமழை பெய்துள்ளது. அதில் ரொம்பவே பலவீனமாக இருக்கிறார். எத்தனை நாட்களாக அங்கு கட்டி வைக்கப்பட்டு இருக்கிறார் என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டு கணவர் கட்டி வைத்துவிட்டு தப்பிவிட்டதாக நம்பப்படுகிறது.
தற்போதைய விசாரணையின் ஒரு பகுதியாக அப்பெண்ணின் உறவினர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறை குழுக்கள் தமிழ்நாடு, கோவா மற்றும் பிற இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்..