இந்திய வீரர் ரோகித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ள ரோகித் சர்மா திடீரென ஓய்வை அறிவித்தது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து ரோகித் சர்மா புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். சத்தீஷ்வர் புஜாராவின் மனைவி பூஜா புஜாரா எழுதிய “கிரிக்கெட்டர் மனைவியின் டைரி” என்ற புத்தகத்தை வெளியிட்ட ரோகித் சர்மா அந்த நிகழ்வில் தனது தந்தை பற்றி மனம் திறந்து பேசினார். அப்போது, தனது தந்தைக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது தனி மரியாதை உண்டு என தெரிவித்தார்.
இது குறித்து பேசிய ரோகித் சர்மா, “என் தந்தை போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றினார். என் தாய் என்ன செய்தார் என்பதை நான் கூறியிருந்தேன். அதை போன்றே என் தந்தை நாங்கள் தற்போது வாழும் வாழ்க்கைக்காக நிறைய தியாகங்களை செய்திருக்கிறார். என் தந்தை எப்போதும், முதல் நாள் முதலாகவே டெஸ்ட் கிரிக்கெட் மீது தனி பிரியம் கொண்டுள்ளார்.”
“அவருக்கு புதிய தலைமுறை கிரிக்கெட் பிடிக்காது. நான் ஒருநாள் போட்டிகளில் 264 ரன்களை அடித்த நாள் இன்றும் நினைவில் உள்ளது. அன்றைய தினம் போட்டிக்கு பிறகு அவரை சந்தித்தேன். அப்போது அவர் எல்லாம் சரி, நன்றாக விளையாடினாய் என்று கூறினார். எனினும், அவரது பாராட்டில் எவ்வித சுவாரஸ்யமும், அதீத மகிழ்ச்சியம் காணப்படவில்லை.”
“டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் நல்ல 30, 40, 50 அல்லது 60 ரன்களை குவித்தால் கூட அவர் அதைப் பற்றி விரிவாக என்னிடம் பேசிக் கொண்டிருப்பார். அவர் டெஸ்ட் கிரிக்கெட் மீது அத்தகைய காதல் கொண்டிருந்தார். அவர் எப்படியிருந்தாலும், முன்னேற வேண்டும் என்றே விரும்புவார்.”
“சிவப்பு பந்தில் நான் விளையாடிய போட்டிகளை என் தந்தை அதிகளவில் பார்த்திருக்கிறார். அவர் சிவப்பு பந்து கிரிக்கெட்டை அதிகம் பாராட்டுவார். அந்த வகையில், நான் ஓய்வு அறிவித்தது அவரை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியது. எனினும், அவரிடம் அதே அளவுக்கு மகிழ்ச்சியும் இருந்தது. அது தான் என் தந்தை. நான் இன்று இந்த நிலையில், இருப்பதற்கு அவர் மிகப்பெரிய பங்களிப்பை செலுத்தியுள்ளார். அவரது உதவியின்றி, இது எதுவும் சாத்தியமில்லை,” என்று தெரிவித்தார்.