போக்கோ பிரான்டின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை உணர்த்தும் வகையிலான டீசர்கள் தற்போது ப்ளிப்கார்ட் வலைதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும், புதிய அல்ட்ரா வேரியண்ட் உடன் போக்கோ F7 மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
சர்வதேச வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது போக்கோ F7 இந்திய வேரியண்டில் அதிக பேட்டரி திறன் இருக்கும் என்று கூறப்படுகிறது. இரு வேரியண்ட்களும் ஒரே நாளில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. முன்னதாக போக்கோ F7 மற்றும் போக்கோ F7 அல்ட்ரா மாடல்கள் மார்ச் மாத வாக்கில் சில சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டன.
ப்ளிப்கார்ட் டீசர் தவிர்த்து போக்கோ இந்தியா தனது எக்ஸ் தளப் பதிவில் புதிய ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து ப்ளிப்கார்ட் மற்றும் போக்கோ வெளியிட்டுள்ள டீசர்களில் புதிய ஸ்மார்ட்போன்களின் பெயர் தவிர வேறு எந்த விவரங்களும் இடம்பெறவில்லை.
முன்னதாக போக்கோ இந்தியா தலைவர் ஹிமான்ஷூ டான்டன் போக்கோ F7 அல்ட்ரா மாடலின் டீசரை வெளியிட்டு இருந்தார். புதிய போக்கோ F7 அல்ட்ரா இந்திய வேரியண்ட் அதன் சர்வதேச வேரியண்ட் போன்றே காட்சியளிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர், 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள் மற்றும் 5300mAh பேட்டரி கொண்டிருக்கிறது.
ஏற்கனவே இணையத்தில் வெளியான தகவல்களில் போக்கோ F7 இந்திய வேரியண்ட் 7550mAh பேட்டரி கொண்டிருக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. இதுதவிர ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 பிராசஸர், 50MP பிரைமரி டூயல் கேமரா, 6.83 இன்ச் 1.5K Flat LTPS OLED டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
புதிய போக்கோ F7 மாடல் ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரிபிராண்டெட் வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சில சர்வதேச சந்தைகளில் போக்கோ F7 ப்ரோ மாடல் அல்ட்ரா வேரியண்ட் உடன் அறிமுகம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாவது கேள்விக்குறியான விஷயம் தான்.