கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ மற்றும் தனியார் துறை வங்கியான எச்டிஎப்சி ஆகியவை தனது கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டுவரவுள்ளன. அதன்படி புதிய விதிமுறைகள் வருகிற ஜூலை 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
எஸ்பிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு விதிமுறை மாற்றங்கள் காரணமாக மாதாந்திர பில் கணக்கிடும் முறை பாதிக்கப்படும். இதுதவிர கிரெடிட் கார்டு பயனர்களுக்கு இலவச காப்பீடு சலுகைகள் நிறுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது.
கிரெடிட் கார்டு மாதாந்திர பில்களில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை கணக்கிடும் முறையை எஸ்பிஐ மாற்றுகிறது. புதிய கணக்கீட்டில் முழு ஜிஎஸ்டி தொகை, மாத தவணை தொகை, கட்டணங்கள், நிதி சார்ந்த இதர கட்டணங்கள் மற்றும் அதிகப்படியான தொகை இருப்பின் அதுவும் அடங்கும். இதுதவிர குறைந்தபட்ச நிலுவை தொகையை கணக்கிட நிலுவையில் உள்ள தொகையில் 2 சதவீதம் சேர்க்கப்படும்.
இதுமட்டுமின்றி கிரெடிட் கார்டுக்கான சலுகைகள் புதிய வரிசையில் சரி செய்யப்படுகிறது. இதில் முதலில் ஜிஎஸ்டி, மாத தவணை தொகை, கட்டணங்கள், நிதி கட்டணங்கள், இருப்பு பரிமாற்ற தொகைகள், சில்லறை செலவுகள் மற்றும் ரொக்க முன்பணம் ஆகியவை அடங்கும். இத்துடன் இலவச விமான விபத்து காப்பீடு சேவையை நிறுத்த எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.
எஸ்பிஐ போன்றே எச்டிஎப்சி வங்கியும் தனது கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம் செய்கிறது. இந்த மாற்றங்கள் ஜுலை 1-ம் தேதியே அமலுக்கு வருகிறது. அதன்படி டிரீம் 11, ரம்மி சர்க்கிள், எம்பிஎல் போன்ற ஆன்லைன் கேமிங் தளங்களில் ஒவ்வொரு மாதமும் ரூ. 10,000-க்கும் அதிகமாக செலவிடும் வாடிக்கையாளர்கள் அதற்காக 1 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். மாதாந்திர கேமிங் செலவில் இந்தக் கட்டணம் பொருந்தும் என்றும் இதற்கான வரம்பு ரூ. 4,999 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கேமிங் சார்ந்த செலவீனங்களுக்கு வெகுமதி புள்ளிகள் எதுவும் வழங்கப்படாது. இதுதவிர பேடிஎம், மொபிகுவிக் போன்ற மூன்றாம் தரப்பு வாலட்களில் ஒவ்வொரு மாதமும் ரூ. 10,000-க்கும் அதிகமாக பணத்தை ஏற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.