சம்பவம் செய்த ரிஷப் பண்ட்… தலைவா You’re Great… வணங்கி வரவேற்ற கே.எல். ராகுல்…

இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது, மிகப்பெரிய தவறு என்பதை முதல் நாள் போட்டியின் முடிவிலேயே உணர்ந்திருக்கும்.

இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கடக்க கே.எல். ராகுல் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டு தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இவருடன் களமிறங்கிய ஜெய்ஸ்வால் சதம் விளாசினார். மறுப்பக்கம் கேப்டன் சுப்மன் கில் தன் பங்கிற்கு ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்த அவரும் சதம் விளாசினார்.

பிறகு ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை பறிக்கொடுக்க ரிஷப் பண்ட் கிரீஸ்-க்கு வந்தார். டெஸ்ட் போட்டிகளில் இவரது ஆட்டம் வேறு யாராலும் நினைத்தும் பார்க்க முடியாத வகையில் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் அரைசதம் கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தான் ரிஷப் பண்ட் தனது வேலையை காட்ட தொடங்கினார். டெஸ்ட் போட்டிகளில் எப்போதும் ஒவ்வொரு நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் வீழ்த்த பந்துவீசும் அணி முனைப்பு காட்டுவதும், பேட்டிங் செய்வோர் விக்கெட்டை பறிக்கொடுக்காமல் இருக்க நிதானமாக விளையாடுவதும் வழக்கமாக இருக்கும். எனினும், இந்த ரூல்ஸ் எனக்கு பொருந்தாது என்ற கணக்கில் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் ரிஷப் பண்ட் சிக்சர் விளாசினார்.

இவரது சிக்சருக்கு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் களத்திலேயே அதிர்ச்சி ரியாக்ஷன் கொடுத்துவிட்டார். மறுப்பக்கம் டிரெஸிங் ரூமில் ரிஷப் பண்ட்-ஐ கிண்டல் செய்து வரவேற்க கே.எல். ராகுல் வாயிலிலேயே தயாராக நின்று கொண்டிருந்தார். கடைசி ஓவரில் சிக்சரை பறக்க விட்டு டிரெசிங் ரூம் வந்து கொண்டிருந்த ரிஷப் பண்ட்-ஐ பார்த்து வணக்கம் வைத்து தலையை குணிந்த படி கே.எல். ராகுல் வரவேற்றார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்களை குவித்துள்ள நிலையில், ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 65 ரன்களுடனும், சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 127 ரன்களையும் அடித்துள்ளனர்.

Leave a Comment