அடுத்த இலக்கு மம்தா, ஸ்டாலின்! தயாராக இருங்கள்.. பீகார் வெற்றிக்குப் பின் அமித்ஷா பகிரங்க சவால்!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் முக்கிய வியூக வகுப்பாளருமான அமித்ஷா, தமது அடுத்த அரசியல் இலக்குகளைப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இது, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டின் ஆளும் கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு நேரடி எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

சவால் விடுத்த அமித்ஷா :

குஜராத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, பாஜகவின் தொடர்ச்சியான வெற்றிகளைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகளுக்கு நேரடியாகச் சவால் விடுத்தார்.

“சகோதரி மம்தா பானர்ஜி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று இந்த மேடையில் இருந்து ஒன்று சொல்கிறேன், தயாராக இருங்கள். பீகாரை வென்று முடித்துவிட்டோம், அடுத்தது மேற்கு வங்கமும், தமிழ்நாடும்தான்” என்று அவர் ஆவேசமாகக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல்களில் (2026), மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் பிரம்மாண்ட வெற்றியைப் பெறும். மக்கள் சக்தியுடன் தமிழகத்தில் திமுகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் முற்றிலும் துடைத்தெறியப்படும்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.

அமித்ஷாவின் இந்தக் கருத்துகள், பாஜகவின் அரசியல் கவனம் தற்போது தென் மாநிலங்கள் மற்றும் கிழக்குப் பிராந்தியங்களை நோக்கித் திரும்பியுள்ளதை உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக, தமிழகத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை பாஜக மிகவும் தீவிரமாக எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது.

இதற்கு முன்னதாக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும் சரி, உங்களால் தமிழ்நாட்டை ஆள முடியாது” என்று சவால் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அமித்ஷாவின் இந்தப் பேச்சு, தமிழக அரசியல் களத்தில் மேலும் அனலைக் கிளப்பியுள்ளது.

Leave a Comment