கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை முதன்முறையாகக் கைப்பற்றி பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது. தொடர்ச்சியாக சுமார் 45 ஆண்டுகாலம் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் (LDF) கட்டுப்பாட்டில் இருந்த இந்தக் கோட்டையை பாஜக தகர்த்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி :
திருவனந்தபுரம் மாநகராட்சியில் உள்ள மொத்தம் 101 வார்டுகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 50 இடங்களைக் கைப்பற்றியது. இதன் மூலம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் மாநகராட்சியின் மேயர் பதவியில் முதன்முறையாக அமர உள்ளது.
ஆளும் கூட்டணியான இடதுசாரி முன்னணி (LDF) சுமார் 29 இடங்களைப் பெற்றுப் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) சுமார் 19 இடங்களைப் பெற்றுள்ளது.
கேரள அரசியலில் பாரம்பரியமாக ஆளும் இடதுசாரி கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே மட்டுமே போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில், கேரள அரசியலில் வலுவான வேரூன்றலை ஏற்படுத்த பா.ஜ.க. தொடர்ந்து முயன்று வந்த நிலையில், தலைநகரையே கைப்பற்றியது அக்கட்சிக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
பிரதமர் மோடி பெருமிதம் :
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக பெற்ற இந்த வெற்றி குறித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த வெற்றி கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை தருணம் ஆகும். கேரள மக்கள் ஆளும் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் மீது விரக்தியில் உள்ளனர். பாஜக கூட்டணியிடமிருந்து நல்லாட்சியையும் வளர்ச்சியையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்,” என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மாநிலத் தலைநகரையே கைப்பற்றியிருப்பது, அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.