த.வெ.க கூட்டணியில் சேர புதிய நிபந்தனை விதித்த செங்கோட்டையன்!.. – 2026 இலக்கு என்ன தெரியுமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், கட்சி கூட்டணி அமைப்பதற்கான நிபந்தனையாக, தலைவர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என அதிரடியாகக் கூறியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு அவர் விடுத்துள்ள இந்தக் கருத்து, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026-ல் விஜய்யே நிரந்தர முதலமைச்சர்:

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், த.வெ.க-வின் இலக்கு குறித்து மிகத் தெளிவாகப் பேசினார்.

“தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்கும் என்றால், ஒரு முக்கியமான நிபந்தனை உண்டு. த.வெ.க தலைவர் விஜய் தான் முதலமைச்சர் என்று ஏற்றுக்கொள்பவர்களால் மட்டும்தான் இந்தக் கூட்டணியில் இணைய முடியும். வரும் 2026 மே மாதம் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் தான் என்ற வரலாற்றை நாங்கள் படைப்போம். மக்களின் ஆதரவு அவருக்கு அபரிமிதமாக உள்ளது.”

கூட்டணி கட்சிகளுக்கு செக்: 

செங்கோட்டையனின் இந்த அறிவிப்பு, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க விரும்பும் கட்சிகளுக்கு ஒரு வெளிப்படையான ‘நிபந்தனையாக’ பார்க்கப்படுகிறது. கூட்டணி அமைக்கும் முன்பே, முதலமைச்சர் வேட்பாளர் குறித்த நிலைப்பாட்டைத் த.வெ.க மிகத் தெளிவாக அறிவித்திருப்பது, அக்கட்சியின் அரசியல் வலிமையைக் காட்ட முயற்சிப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இதுவரை கூட்டணி குறித்து விஜய்க்கு முழு அதிகாரம் உள்ளதாகக் கட்சித் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தற்போது செங்கோட்டையன் இந்த நிபந்தனையை விதித்திருப்பது, வரும் நாட்களில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கும் என்பதற்கான சைகையாகவே கருதப்படுகிறது.

Leave a Comment