விஜய் வருகையால் திமுகவின் ஓட்டுகளுக்கு ஆபத்தா? – குண்டைத் தூக்கிப் போட்ட அண்ணாமலை!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு, திமுகவின் பாரம்பரிய சிறுபான்மையினர் வாக்கு வங்கி சரிந்து வருவதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரே (MP) தன்னிடம் கவலையுடன் தெரிவித்தார்” என பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகளும், வாக்கு வங்கி குறித்த விவாதங்களும் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் தாக்கம் குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக எம்பியின் ரகசியப் பகிர்வு:

அண்ணாமலை, திமுகவின் தற்போதைய நிலை குறித்து ஒரு ரகசியத் தகவலைப் பகிர்ந்தார். அவர் கூறியதாவது,
“சமீபத்தில் திமுக எம்பி ஒருவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர், ‘விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, எங்களிடம் இருக்கும் மைனாரிட்டி (சிறுபான்மையினர்) ஓட்டுகள் எல்லாம் கொஞ்சம் இந்த பக்கம், அந்த பக்கம் போய்க்கொண்டிருக்கிறது’ என்று கவலையோடு சொன்னார். விஜய்யின் வருகை திமுகவின் அசைக்க முடியாத ஓட்டு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதை அவர்களே உணர்ந்துள்ளனர்.”

வழக்கமாக திமுகவின் பக்கமே உறுதியாக நிற்கும் சிறுபான்மையின மக்களின் வாக்குகள், விஜய்யின் வருகையால் சிதற வாய்ப்புள்ளதாக அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். விஜய்யின் கட்சி மாநாட்டிற்குப் பிறகு தவெக-வில் பல சமூகத்தினரும் இணைந்து வரும் நிலையில், இந்தத் தகவல் திமுகவிற்கு ஒரு எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்படுகிறது.

திமுகவின் ரியாக்‌ஷன் என்ன? :

அண்ணாமலையின் இந்த அதிரடிப் பேச்சுக்கு திமுக தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதிலடி எதுவும் வரவில்லை. இருப்பினும், சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்கள் இதனை அண்ணாமலையின் ‘வழக்கமான அரசியல் யுக்தி’ என விமர்சித்து வருகின்றனர்.

தேர்தல் நெருங்கும் வேளையில், திமுகவின் பலமாக இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகளை விஜய் குறிவைக்கிறாரா அல்லது அண்ணாமலையின் இந்தத் தகவல் திமுக கூட்டணிக்குள் சலசலப்பை உண்டாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment