திமுக தீய சக்தி என்று விஜய்க்கு இப்பதான் அறிவு வந்ததா?.. தம்பி விஜய்யை வறுத்தெடுத்த சீமான்..

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மையில் ஆளுங்கட்சியான திமுகவை ‘தீய சக்தி’ என விமர்சித்திருந்த நிலையில், அதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கிண்டலுடனும் ஆவேசத்துடனும் பதிலடி கொடுத்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.

சலவை இயந்திரமாகும் அரசியல் கட்சிகள்:

“ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் தமிழ்நாட்டில் ஒரு அதிசயம் நடக்கும். எல்லா அரசியல் கட்சிகளும் தங்களைத் தூய சக்தியாக மாற்றிக் கொள்ள ‘சலவைக்கு’ (Laundry) போட்டது போல் பளிச்சென்று வருவார்கள். இப்போது விஜய் திமுகவைத் தீய சக்தி என்று சொல்லியிருக்கிறார். ஆனால், எது தீமை? எதனால் அது தீய சக்தி? என்பதை அவர் தெளிவாகச் சொல்ல வேண்டும்,” என்று சீமான் வலியுறுத்தினார்.

2021-ல் போட்ட ஓட்டு என்னாச்சு?:

விஜய்யின் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டிய சீமான் கூறியதாவது,”தம்பி விஜய்க்கு திமுக தீய சக்தி என்பது இப்பதான் தெரிய வருவது என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. அவரே கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்குத்தான் ஓட்டு போட்டேன் என்று வெளிப்படையாகச் சொன்னார். ஆனால் இப்போது, ‘என் ஓட்டையும் உங்க ஓட்டையும் வாங்கி நம்மளை ஏமாத்திட்டாங்க’ என்று புலம்புகிறார். ஓட்டுப் போடும்போது அது தீய சக்தி என்று அவருக்குத் தெரியவில்லையா?”

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இப்பதான் நினைவுக்கு வந்தாங்களா?

மேலும் பேசிய அவர், “அன்றே.. ஐயா எம்.ஜி.ஆர் சொன்னார், அம்மா ஜெயலலிதா சொன்னார் என்று இப்போது மேடைகளில் விஜய் மேற்கோள் காட்டுகிறார். அவர்கள் எப்போதோ திமுகவைத் தீய சக்தி என்று சொல்லிவிட்டார்கள். அது இப்பதான் விஜய்க்கு நினைவுக்கு வந்ததா? அன்று அவர்கள் சொல்லும்போது வராத ஞானம், இவருக்கு இப்போது வந்திருப்பது ஏன்?”

விஜய் கட்சி தொடங்கிய ஆரம்பத்தில் அவருக்கு ஆதரவாகப் பேசி வந்த சீமான், தற்போது நேரடியாக விமர்சனங்களை முன்வைத்து வருவது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 2026 தேர்தலை நோக்கி இரு கட்சிகளும் இளைஞர்களின் வாக்குகளைக் குறிவைக்கும் நிலையில், ‘அண்ணன் – தம்பி’ இடையிலான இந்த மோதல் தவெக மற்றும் நாம் தமிழர் தொண்டர்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது.

Leave a Comment