தாய்மார்கள் கைது அடுத்து தந்தையருக்கு வலை.. சிறுமியைத் துன்புறுத்திய சிறுவர்களின் பெற்றோருக்கு நேர்ந்த கதி!

“பிள்ளைகளைச் சரியாக வளர்க்கவில்லை” என்ற காரணத்திற்காக, 8-ம் வகுப்பு சிறுமிக்கு ஆபாசத் தொல்லை கொடுத்த நான்கு சிறுவர்களின் தாய்மார்களை உத்தரப் பிரதேச மாநில போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

நடந்தது என்ன?:
உத்தரப் பிரதேச மாநிலம் பெய்ரேலியில், 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த 13 வயதிற்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தொடர்ந்து ஆபாச கமெண்ட்கள் கூறி துன்புறுத்தி வந்துள்ளனர். இது குறித்துப் புகார் எழுந்ததையடுத்து, போலீசார் அந்த நான்கு சிறுவர்களையும் பிடித்தனர்.

தாய்மார்கள் கைது:
விசாரணையில் அந்த நான்கு சிறுவர்களும் பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்தது தெரியவந்தது. பிள்ளைகளைச் சரியான முறையில் கண்காணிக்காமல், அவர்களைத் தவறான வழியில் வளர்த்ததற்காக அந்த நான்கு சிறுவர்களின் தாய்மார்களையும் போலீசார் கைது செய்தனர்.

தந்தையருக்கும் வலை:
கைது செய்யப்பட்ட தாய்மார்கள், “இனி பிள்ளைகளைச் சரியாகக் கவனித்துக் கொள்வோம்” என உறுதியளித்ததைத் தொடர்ந்து எச்சரிக்கைக்குப் பின் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், வெளிமாநிலங்களில் வேலை நிமித்தமாக இருக்கும் அந்தச் சிறுவர்களின் தந்தையர்கள் ஊர் திரும்பியதும், அவர்களும் கைது செய்யப்படுவார்கள் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிள்ளைகள் செய்யும் குற்றங்களுக்குப் பெற்றோரே பொறுப்பேற்க வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment