பாமக யாருக்கு?.. ராமதாஸ் கூட்டும் கூட்டத்திற்குத் தடை போடும் அன்புமணி.. ரத்த உறவுகளுக்கு இடையே முற்றிய மோதல்!

பாட்டாளி மக்கள் கட்சிக்குள் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில்,

“அப்பா நடத்தும் கூட்டம் செல்லாது” என ராமதாஸுக்கு எதிராக அன்புமணி அதிரடியாக கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே தலைமைப் போர் வெடித்துள்ளது. சேலத்தில் வரும் 29-ஆம் தேதி ராமதாஸ் கூட்டியுள்ள பொதுக்குழு கூட்டம் சட்டவிரோதமானது என அன்புமணி தரப்பு பகிரங்கமாக அறிவித்துள்ளது.

சட்ட விதிகளால் செக் வைத்த அன்புமணி:
இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், “சேலத்தில் 29-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ பொதுக்குழு அல்லது செயற்குழு கூட்டம் அல்ல. கட்சியின் அமைப்பு விதிகள் 15 மற்றும் 16-ன் படி, கட்சியின் தலைவர் தலைமையில்தான் இத்தகைய கூட்டங்கள் நடைபெற வேண்டும். எனவே, அங்கு எடுக்கப்படும் எந்த முடிவுகளும் பாமக-வை ஒருபோதும் கட்டுப்படுத்தாது,”எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் புகார்:
கட்சியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோதமாகப் பொதுக்குழு என்ற பெயரில் ஆட்களைத் திரட்டுவது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் ராமதாஸ் தரப்பு எடுக்கும் முடிவுகளுக்குச் சட்டரீதியான நெருக்கடியை அன்புமணி கொடுத்துள்ளார். மேலும், கட்சியின் சின்னம் மற்றும் பெயர் தொடர்பான விவகாரங்களில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அன்புமணி தரப்பு தயாராகி வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே தந்தை மற்றும் மகன் இடையே கட்சி அதிகாரம் தொடர்பாகப் பனிப்போர் நிலவி வந்தது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ராமதாஸ் தரப்பு சேலத்தில் பிரம்மாண்டமான பொதுக்குழுவை நடத்தித் தனது செல்வாக்கை நிரூபிக்கவும், முக்கிய முடிவுகளை எடுக்கவும் திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்பே அன்புமணி “செல்லாது” என அறிவித்திருப்பது தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாமக-வில் பிளவு?
முக்கிய நிர்வாகிகள் பலர் அன்புமணி பக்கம் இருக்கும் நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் ராமதாஸ் பக்கம் நிற்கின்றனர். இந்த மோதல் தொடர்ந்தால், இரட்டைத் தலைமை விவகாரத்தில் அதிமுக சந்தித்ததைப் போன்ற ஒரு சட்டப்போராட்டத்தைப் பாமக-வும் சந்திக்க நேரிடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 29-ஆம் தேதி சேலம் கூட்டத்திற்குப் பிறகு பாமக இரண்டு துண்டுகளாக உடையுமா? அல்லது சமரசம் ஏற்படுமா? என்பதே தமிழக அரசியலின் தற்போதைய எதிர்பார்ப்பு.

Leave a Comment