சென்னையின் அடையாளமாகத் திகழும் மெரினா மற்றும் பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் இனி குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் கடற்கரைக்கு வருவார்கள் என்பதால், இந்தத் தூய்மைப் பணியை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது.
அபராதம் ஏன்?
சென்னையின் கடற்கரைகளில் தினசரி சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்படுகின்றன. குறிப்பாக வார இறுதி நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் உணவுக் கழிவுகளால் கடற்கரையின் அழகு சீர்குலைவதோடு, கடல் சார் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்கவே ‘திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016’-ன்கீழ் இந்த மெகா அபராதம் விதிக்கப்பட உள்ளது.
யார் யாருக்கு அபராதம்?
மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கடற்கரை மணற்பரப்பில் உணவுக் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கவர்களை வீசுபவர்களுக்கு உடனடியாக ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
கடற்கரை ஓரங்களில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் தங்கள் பகுதியில் குப்பைகளை முறையாகச் சேகரிக்காவிட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் குப்பை கொட்டுவது மற்றும் வாகனங்களில் செல்லும் போது குப்பைகளை வெளியே வீசுவோரும் இந்த அபராத வளையத்திற்குள் வருவார்கள்.
கண்காணிப்பு தீவிரம்:
இந்த விதிகளை அமல்படுத்த மாநகராட்சி சார்பில் சிறப்புத் துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் கடற்கரை முழுவதும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, விதிகளை மீறுவோரிடம் இருந்து POS (Point of Sale) இயந்திரங்கள் மூலம் டிஜிட்டல் முறையில் அபராதத் தொகையை வசூலிப்பார்கள்.
“சென்னையின் பெருமையான மெரினாவைச் சர்வதேச தரத்தில் பராமரிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். குப்பைகளைக் குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். மீறினால் பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்படும்” என மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.