அதிமுக கூட்டணி மட்டும்தான் ஒரே வழி.. இல்லன்னா
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துப் பலரும் பலவிதமாகப் பேசி வரும் நிலையில், பிரபல அரசியல் விமர்சகர் ரங்கராஜ் பாண்டே ஒரு அதிரடி குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
DMK vs TVK? வெறும் ஆசைதான்!
விஜய்யின் மனக்கணக்குப்படி, வரும் தேர்தலில் திமுக-வுக்கு நேரடிப் போட்டியாளராகத் தான் இருக்கப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இதுகுறித்து பாண்டே கூறுகையில், “திமுக-வுக்கு எதிராகப் போட்டியிட வேண்டும் என்பது விஜய்யின் நல்ல ஆசைதான். ஆனால், கள நிலவரப்படி அது நடக்க வாய்ப்பில்லை. தவெக ஒரு பெரிய வித்தியாசத்தில் மூன்றாவது இடத்துக்குத் தான் போகும்” எனத் தெரிவித்துள்ளார்.
கூட்டம் ஓட்டாக மாறுமா?
விஜய்யைப் பார்க்க வரும் லட்சக்கணக்கான மக்களைப் பற்றிப் பேசியவர், “விஜய்யைப் பார்க்கக் கூட்டம் வரும், அவர் பேசுவதைக் கேட்பார்கள், உற்சாகமாக கை தட்டுவார்கள். ஆனால், அந்த ஆர்வம் எல்லாம் ஓட்டுப் போடும்போது இருக்குமா என்பது சந்தேகம்தான். மக்கள் ஓட்டுப் போடும்போது மிகவும் நிதானமாக யோசித்துத் தான் போடுவார்கள். கூட்டத்தை வைத்து விஜய் ஏமாந்துவிடக் கூடாது” என எச்சரித்துள்ளார்.
அதிமுக கூட்டணி – ‘கேம் சேஞ்சர்’:
விஜய்க்கான ஒரே ஒரு வாய்ப்பு கூட்டணி தான் எனச் சுட்டிக்காட்டிய பாண்டே, “விஜய் மட்டும் தனியாக நின்றால் அவருக்குப் பெரிய சிக்கல் காத்திருக்கிறது. ஆனால், அவர் அதிமுக-வுடன் கூட்டணி வைத்துக்கொண்டால், தமிழக அரசியலில் ஒரு பெரிய ‘கேம் சேஞ்சர்’ ஆக மாற வாய்ப்பிருக்கிறது. இதை அவர் கவனமாக கையாள வேண்டும்” எனப் போட்டுடைத்துள்ளார்.
விஜய்யின் அரசியல் எதிர்காலம் மற்றும் தேர்தல் கணிப்பு குறித்து ரங்கராஜ் பாண்டே பேசியுள்ள இந்த விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.