“ஊழலை ஒழிப்பேன், வாரிசு அரசியலை வீழ்த்துவேன்” எனப் பஞ்ச் டயலாக் பேசிவிட்டு, தற்போது 15 சீட்டுக்காக ஆளுங்கட்சியுடன் பேரம் பேசும் கமலஹாசனையும், ஏசி அறையில் அமர்ந்து அரசியல் செய்யும் விஜய்யையும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது பாணியில் விளாசித் தள்ளியுள்ளார்.
உலகநாயகன் டூ நகைச்சுவை நடிகர்!
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, கமலஹாசனின் அரசியல் மாற்றத்தைக் கடுமையாகச் சாடினார். “மதுரையில் கட்சி ஆரம்பித்தபோது கலைஞர் டிவியையெல்லாம் போட்டு உடைத்து, பெரிய புரட்சி செய்யப்போவதாக கமலஹாசன் பில்டப் கொடுத்தார். தமிழகமே அவரை உலகளவில் பெரிய தலைவராகப் பார்த்தது. ஆனால், இன்று அவர் ஒரு நகைச்சுவை நடிகர் போல ஆகிவிட்டார். ஊழல் கட்சி என்று எதைச் சொன்னாரோ, அதே கட்சியுடன் இப்போது 15 சீட்டுக்காகக் கையேந்தி நிற்பதுதான் உலகநாயகனின் லட்சணமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
விஜய்யின் ‘டிஜிட்டல்’ பாசமும்… கரூர் சோகமும்!
சமீபத்தில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை விஜய் நேரில் சென்று சந்திக்காததைச் சுட்டிக்காட்டிய அவர், “பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைத் தனது இடத்திற்கு வரவழைத்துத் துக்கம் விசாரிப்பது ஒரு கேடுகெட்ட கலாச்சாரம். தமிழகத்தில் இப்படி ஒரு மோசமான நடைமுறையை விஜய் கொண்டு வருகிறார். அறையில் உட்கார்ந்து அரசியல் செய்தால் மக்கள் தலைவராக முடியாது. களத்திற்கு வந்து மக்களைச் சந்திப்பதே உண்மையான அரசியல்” என ஆவேசமானார்.
தயாரிப்பாளர்கள் தெருவில்… விஜய்க்கு எம்.ஜி.ஆர் கனவா?
“சினிமா முகத்தை வைத்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறார்கள். வைகைப்புயல் வடிவேலுவோ அல்லது நயன்தாராவோ வந்தால்கூட மக்கள் கூட்டம் கூடும். ஆனால் அந்தக் கூட்டம் ஓட்டாக மாறாது. அரசியல் கட்டமைப்பு என்பது எங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடம் மட்டுமே இருந்தது. எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுத்தால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் நிச்சயம். ஆனால் இன்று விஜய் படத்தை எடுத்து எத்தனை தயாரிப்பாளர்கள் தெருவில் நிற்கிறார்கள் தெரியுமா? அவர் ஒரு ‘மினிமம் கேரண்டி’ ஹீரோவே கிடையாது. அப்படிப்பட்டவர் அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது” என்றார்.
விசிலை வைத்து ஊதத்தான் முடியும்!
தவெக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ‘விசில்’ சின்னம் குறித்தும் பேசிய அவர், “விசில் இருந்தால் அதை வைத்துக்கொண்டு மைதானத்தில் ஓரம் நின்று ஊதத்தான் முடியும். ஓட்டப்பந்தயத்தில் ஓடி ஜெயிக்க வேண்டுமென்றால் அதற்குத் தனித் தகுதி வேண்டும். தேர்தல் சீட் அறிவித்தவுடன் விஜய்யின் உட்கட்சியிலேயே வெடிப்பு ஏற்படும், அப்போது தெரியும் அவர் லட்சணம்” என நேரடியாகச் சவால் விடுத்துள்ளார்.