வீட்டை விட்டு வெளியேற விஜய்க்கு வாய்ப்பில்லை போல… தவெக பிரச்சாரப் பயணத்திற்கு ‘திடீர்’ பிரேக்!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் கொள்கைகளையும், அடுத்தகட்டத் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல 10 பேர் கொண்ட தேர்தல் பிரச்சாரக் குழுவை சமீபத்தில் நியமித்தார். இந்தக் குழுவின் முதல் சுற்றுப்பயணம் இன்று தொடங்கவிருந்த நிலையில், அது திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காரணம் என்ன?
மண்டல வாரியாகச் சுற்றுப்பயணம் செய்து, அந்தந்தப் பகுதி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்த இந்தக் குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், கூட்டங்களை நடத்துவதற்குப் பல மாவட்டங்களில் தகுந்த திருமண மண்டபங்கள் கிடைக்கவில்லை என்று கட்சித் தரப்பில் சொல்லப்படுகிறது. “40% வாக்கு வங்கி” எனப் பெரிய இலக்குடன் களமிறங்கியுள்ள ஒரு கட்சிக்கு, ஒரு மண்டபம் கூடக் கிடைக்கவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாக ரீதியான சிக்கலா?
அரசியல் நெருக்கடியா? ஏற்கனவே விஜய்யின் முந்தைய பிரச்சாரங்களின் போது, திருச்சி மற்றும் கரூரில் காவல்துறை அனுமதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சிக்கல்களைத் தவெக சந்தித்தது. இப்போது மண்டபம் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் கூறிப் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருப்பது, உண்மையிலேயே இடப் பிரச்சனையா அல்லது ஆளுங்கட்சியின் மறைமுக அழுத்தமா என்ற சந்தேகத்தை விமர்சகர்கள் எழுப்புகின்றனர்.

தொண்டர்கள் ஏமாற்றம்:
145 நாட்களில் வெறும் 15 முறை மட்டுமே விஜய் வெளியே வந்துள்ள நிலையில், தற்போது பிரச்சாரக் குழுவின் பயணமும் தள்ளிப்போயிருப்பது களப்பணியில் ஈடுபட்டுள்ள தவெக தொண்டர்களிடையே சற்றே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் புதிய தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment