தமிழகத்தில் தேர்தல் ஜுரம் இப்போதே பற்றிக்கொண்டுவிட்டது. “நாளைக்கே தேர்தல் நடந்தா யாரு ஜெயிப்பா?” என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு, இந்தியா டுடே – சி வோட்டர் (CVoter) வெளியிட்டுள்ள புதிய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ (Mood of the Nation) கருத்துக்கணிப்பு அதிரடி பதிலைக் கொடுத்துள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தமிழகத்தில் இப்போதும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிதான் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. மொத்தமுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில், திமுக கூட்டணி அப்படியே 38 தொகுதிகளை வாரிச் சுருட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 தேர்தலைப் போலவே இப்போதும் திமுக தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது ஆளுங்கட்சியினரை குஷியாக்கியுள்ளது.
அதிர்ச்சியில் ரத்தத்தின் ரத்தங்கள்!
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வுக்கு இந்தக் கணிப்பு பெரும் பேரிடியாக அமைந்துள்ளது. வெறும் 33 சதவீத வாக்குகளுடன் அதிமுக கூட்டணிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே கிடைக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீவிரமாகப் பணியாற்றி வரும் நிலையில், இந்த ‘சிங்கிள் டிஜிட்’ கணிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
விஜய் சத்தமில்லாமல் சம்பவம்!
இந்தச் செய்தியில் மிக முக்கியமான ஹைலைட் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) தான். கட்சி ஆரம்பித்து சில காலமே ஆன நிலையில், முதன்முறையாக ஒரு தேசிய அளவிலான கணிப்பில் 15% வாக்கு சதவீதத்தை விஜய் தட்டித் தூக்கியுள்ளார்.
திமுக கூட்டணி: 45% வாக்குகள், அதிமுக கூட்டணி: 33% வாக்குகள், தவெக: 15% வாக்குகள்
யாரும் எதிர்பார்க்காத வகையில் 15 சதவீத வாக்குகளை தவெக குறிவைப்பது, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு ‘பவர்புல்’ மூன்றாவது அணி உருவாகப் போவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
மக்களின் மூட் என்ன?
இந்தக் கணிப்பு ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்கிறது – ஆளுங்கட்சி மீதான அதிருப்தி பெரிய அளவில் ஓட்டாக மாறவில்லை என்பதும், அதே சமயம் அதிமுக-வின் வாக்கு வங்கியில் தவெக கைவைக்கத் தொடங்கியிருப்பதும் தெரிகிறது.
2026 சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த ‘மூட் ஆஃப் தி நேஷன்’ ரிப்போர்ட் தமிழக அரசியலில் ஒரு மெகா ட்விஸ்டை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை!