தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக, ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தில் அவருடனே வசித்து வந்தவர் சசிகலா. கட்சி தொடர்பான எந்த தகவலாக இருந்தாலும் சசிகலா மூலம்தான் அந்த தகவல் ஜெயலலிதாவுக்கு போகும்.. அப்படி ஒரு முக்கிய ஆளுமையாக இருந்தவர் சசிகலா..
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவை சசிகலாவே தலைமையேற்று நடத்த வேண்டும் என அதிமுக அமைச்சர்கள் அவரிடம் நேரில் சென்று வலியுறுத்தினார்கள். அவரும் அதை ஏற்றுக்கொண்டு அதிமுக பொதுச் செயலாளராக மாறினார்.. ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு 4 வருடங்கள் சிறை தண்டனை கிடைத்ததால் கூவத்துர் விடுதியில் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்கிவிட்டு சிறைக்கு சென்றார்..
முதல்வராக மாறிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை கைப்பற்றினார்.. அதோடு சசிகலா சிறையில் இருந்து திரும்பிய பின்னரும் அவரை கட்சிக்குள் வராமல் பார்த்துக் கொண்டார்.. அனைத்து எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களின் ஆதரவு மட்டுமில்லாமல், டெல்லியின் ஆதரவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்ததால் சசிகலாவால் எதுவும் செய்ய முடியவில்லை.

தற்போது புதிய அரசியல் கட்சியை தொடங்கும் முடிவில் சசிகலா இருக்கிறார்.. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. ஜெயலலிதா இருந்தவரை சசிகலாதான் எல்லாம் என அவருக்கு முக்கியத்துவம் கொடுத்த அதிமுக அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை கைப்பற்றிய பின் ‘சசிகலா ஜெயலலிதாவின் உதவியாளர் மட்டுமே’ என பேச துவங்கினர்.
இந்நிலையில், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுகு அளித்த பேட்டியில் இது தொடர்பான கேள்விக்கு பதில் சொன்ன சசிகலா ‘அம்மா இருந்தவரை அதிமுக அமைச்சர்கள் என்னை வந்துதான் சந்திப்பார்கள்.. அம்மாவிடம் சொல்ல வேண்டியதை என்னிடம்தான் சொல்வார்கள்.. நான் வெறும் பணியாளர் என்றால் என் காலில் அவர்கள் விழுந்தது ஏன்?.. நீங்கள்தான் பொதுச்செயலாளராக வேண்டும் என என்னிடம் அவர்கள் கேட்டது ஏன்?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்..