6 சீட்டு கூட ஜெயிக்க வக்கு இல்லாத விஜய்க்கு 60 சீட்டு எதுக்கு? பாதாளத்துல இருக்குறவங்களை தூக்கிவிட்டு, என் பக்கத்துலயே எதுக்கு உட்கார வைக்கனும்? 10 தோல்வியில் நான் பாடம் படிச்சவன், இப்போ வெற்றியோட சிலபஸை நான்தான் எழுதப்போறேன். எங்களுக்கு ‘கிங் மேக்கர்’ தேவையே இல்லை.. நாங்களே ‘கிங்’ ஆகத்தான் களம் இறங்குறோம்! எடப்பாடி பழனிசாமி ராக்ஸ்..!

 

தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இடையிலான அதிகார போட்டி ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.

மறைந்த தலைவர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவுக்குப் பிறகு, தமிழகத்தின் கள நிலவரத்தை மிகவும் துல்லியமாக அறிந்து வைத்திருக்கும் ஒரு தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளார். சமீபத்திய அரசியல் நகர்வுகள் மற்றும் ரகசிய கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், அதிமுக மீண்டும் பலம் பெற்று வருவதையும், திமுகவுடனான வாக்கு வங்கி வித்தியாசம் வெறும் 3 சதவீதமாக குறைந்துள்ளதையும் அவர் உணர்ந்துள்ளார். இந்த சூழலில், புதிய சக்தியாக உருவெடுக்கும் விஜய்யின் த.வெ.கவை வளர விடுவது அதிமுகவின் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் அவர் மிக தெளிவாக இருக்கிறார்.

விஜய் தரப்பில் இருந்து அதிமுகவிடம் சுமார் 75 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எடப்பாடி பழனிசாமி இந்த கோரிக்கைகளை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். “ஏற்கனவே பலவீனமாக இருக்கும் ஒரு கட்சிக்கு எதற்காக 50 அல்லது 60 தொகுதிகளை கொடுத்து, அவர்களை 45 எம்எல்ஏ-க்களாக வளர்த்து விட வேண்டும்?” என்பதே எடப்பாடியின் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது. அதிமுக தனியாகவோ அல்லது கூட்டணிகளுடனோ களம் கண்டால் 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், விஜய்யின் கோரிக்கைகளுக்கு பணிந்து போக அவர் தயாராக இல்லை.

தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்டமைப்பு மற்றும் நிர்வாக ரீதியான பலவீனங்களை விஜய் இன்னும் முழுமையாக உணரவில்லை என்ற விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. குறிப்பாக, தேர்தல் செலவுகளுக்காக கட்சி நிர்வாகிகளிடம் பணம் இல்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண விளிம்பு நிலை மனிதர்களாக இருக்கும் த.வெ.க நிர்வாகிகள், தங்கள் வாழ்க்கையிலேயே பார்த்திராத தொகை தேர்தல் செலவுக்காக செலவு செய்ய வேண்டும் என்ற நிலையை எண்ணி நிலைகுலைந்து போயுள்ளனர். இதனால் பல தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யக் கூட ஆட்கள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இந்த நிதர்சனமான உண்மைகளை விஜய் கவனிக்க தவறினால், 1996-ல் வைகோ சந்தித்த அதே அரசியல் வீழ்ச்சியை அவரும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்படுகிறது.

த.வெ.க-வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மட்டுமே தற்போது நிலவும் கள எதார்த்தத்தை உணர்ந்த ஒரே நபராக தெரிகிறார். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சென்றால் மட்டுமே சில இடங்களிலாவது வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையாவது எட்ட முடியும் என்பது அவரது கணக்காக உள்ளது. ஆனால், விஜய்யை சுற்றியுள்ள ஒரு சில ஆலோசகர்கள் பாஜக எதிர்ப்பு மற்றும் தனித்தன்மை என்ற பெயரில் கூட்டணியை தடுத்து வருவதாக கூறப்படுகிறது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் அளவிற்கு த.வெ.கவிடம் இன்னும் போதிய நிதியோ அல்லது செல்வாக்குமிக்க வேட்பாளர்களோ இல்லை என்பதுதான் தற்போதைய கசப்பான உண்மை.

விஜய் அரசியலில் ஒரு தெளிவான மனநிலையில் இல்லாமல், ஒருமுறை கூட்டணி என்றும் மறுமுறை தனித்து போட்டி என்றும் முன்னுக்கு பின் முரணாக செயல்படுவது அவரது நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. மறுபுறம் எடப்பாடி பழனிசாமி, கடந்த கால தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, இன்று ஒரு வலுவான ஆளுமையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். விஜயகாந்த் அல்லது எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கு நிதி உதவி செய்து தேர்தலை சந்தித்தார்கள்; ஆனால் விஜய் தனது கட்சி வேட்பாளர்களுக்கு பணம் கொடுப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த பலவீனத்தை அறிந்தே எடப்பாடி பழனிசாமி, விஜய்யை தனது நிழலில் வளர விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார்.

இறுதியாக, 2026 தேர்தல் களம் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய அக்னி பரீட்சையாக அமைய போகிறது. எடப்பாடி பழனிசாமியின் கறாரான அணுகுமுறை மற்றும் விஜய்யின் அனுபவமின்மை ஆகியவற்றுக்கு இடையே நடக்கும் இந்த போரில், த.வெ.க ஓரிரு இடங்களில் வெற்றி பெறுவதே பெரிய விஷயமாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சீமான் போன்ற தலைவர்கள் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு வாக்கு வங்கியை உயர்த்தியிருக்கும் நிலையில், விஜய் எடுத்தவுடனேயே உச்சாணி கொம்பில் உட்கார நினைப்பது சாத்தியமற்றது. வரலாற்றின் குப்பை தொட்டியில் வீசப்பட்ட கட்சிகளின் பட்டியலை விஜய் புரட்டி பார்த்தால் மட்டுமே, எடப்பாடி பழனிசாமி போன்ற கைதேர்ந்த அரசியல்வாதிகளிடம் இருந்து தப்பிக்க முடியும்.

Leave a Comment