அமித்ஷாவும், மோடியும் தமிழ்நாட்டுக்கு படையெடுத்து வரப்போறாங்க.. ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வருவாங்களா? எனது மூத்த சகோதரர்ன்னு ஸ்டாலினை 2024ல்ல சொன்னாரே ராகுல் காந்தி.. இப்ப அந்த அண்ணனை மறந்துட்டாரா? சுவரெல்லாம் ஏறி குதிச்சு ஸ்வீட் வாங்கிட்டு வந்தீங்களே ராகுல், இப்ப என்ன ஆச்சு? திமுக -காங்கிரஸ் கூட்டணி ஜெல் ஆகலையா??

தமிழக தேர்தல் களம் தற்போது அனல் பறக்க தொடங்கியுள்ளது. ஒருபுறம் பாஜகவின் முக்கிய தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழகத்தை நோக்கி தொடர்ந்து “படையெடுத்து” வந்து கொண்டிருக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தனது ஒட்டுமொத்த பலத்தையும் தமிழகத்தில் இறக்க திட்டமிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பில் இன்னும் அந்த வேகம் தென்படவில்லை என்ற ஒரு பொதுவான பேச்சு எழுந்துள்ளது.

ராகுல் காந்தியின் வருகை குறித்து பல கேள்விகள் எழுகின்றன. 2024 மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூரில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, வழியில் இருந்த ஒரு இனிப்பு கடைக்கு திடீரெனச் சென்று குலோப் ஜாமூன் மற்றும் மைசூர் பாக் வாங்கினார். “யாருக்காக இந்த இனிப்பு?” என்று கேட்டபோது, “எனது சகோதரர் ஸ்டாலினுக்காக” என்று அவர் நெகிழ்ச்சியுடன் பதிலளித்தது இன்னும் பலருக்கு நினைவிருக்கலாம். “எனது மூத்த சகோதரர் ஸ்டாலின்” என்று மேடையில் அவர் உருக்கமாக பேசிய அந்த தருணங்கள், திமுக – காங்கிரஸ் கூட்டணியின் நெருக்கத்தை உலகிற்கு பறைசாற்றியது. ஆனால், தற்போது அந்த “அண்ணன் – தம்பி” பாசம் தேர்தல் களத்தில் அதே வேகத்தில் தொடருகிறதா என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு.

இந்த முறை திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைகள் அவ்வளவு எளிதாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகள் வரை எதிர்பார்த்ததாகவும், ஆட்சியில் அதிகாரப் பகிர்வு வேண்டும் என்ற கோரிக்கையை ராகுல் காந்தி முன்னிறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்காக ராகுல் காந்திக்கும் கனிமொழிக்கும் இடையே டெல்லியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருப்பினும், திமுக தலைமை அதிகார பகிர்வுக்கு சம்மதிக்காத நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த மார்ச் 4, 2026 அன்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி காங்கிரசுக்கு 28 இடங்களும், ஒரு ராஜ்யசபா இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதி பங்கீடு முடிந்துவிட்டாலும் பிரச்சார களத்தில் இன்னும் அந்த பழைய உற்சாகம் தென்படவில்லை. ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வருவார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உறுதியளித்துள்ளார். குறிப்பாக, விரைவில் ராகுல் காந்தி தமிழகம் வர திட்டமிட்டுள்ளதாகவும், அதேபோல், பிரியங்கா காந்தியும் தமிழகத்தில் நடைபெறும் சில முக்கிய போராட்டங்களில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மோடி மற்றும் அமித்ஷாவின் தொடர் வருகையோடு ஒப்பிடும்போது, ராகுலின் வருகை தாமதமாவது போன்ற ஒரு தோற்றம் நிலவுகிறது.

ராகுல் காந்தியின் கடந்த கால தமிழக பயணங்கள் மிக நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தின. “எல்லா அரசியல்வாதிகளையும் போல இல்லாமல், ஸ்டாலினை மட்டும் ஏன் சகோதரர் என்று அழைக்கிறேன்?” என்று அவர் அன்று கேள்வி எழுப்பியபோது, அது ஒரு வலுவான கூட்டணியின் அடையாளமாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது புதிய கட்சிகளின் வருகை மற்றும் கூட்டணி கணக்குகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை குறைத்துள்ளது. இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், பாஜகவை எதிர்க்க வேண்டிய கட்டாயம் இரு கட்சிகளையும் மீண்டும் ஒன்றிணைத்துள்ளது.

மொத்தத்தில் தமிழக தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்க போகிறது. அமித்ஷா மற்றும் மோடியின் வருகைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பழைய “ஸ்வீட்” பாசம் இப்போதும் தொடருகிறதா அல்லது வெறும் அரசியல் கணக்குகளுக்காக மட்டும் இந்த கூட்டணி நீடிக்கிறதா என்பது வரும் நாட்களில் அவர்கள் மேடை ஏறும் போது தெரிந்துவிடும். 2024-ல் சொன்னது போலவே “சகோதரர் ஸ்டாலின்” என்று ராகுல் காந்தி மீண்டும் முழங்குவாரா அல்லது பிரச்சாரத்தை தவிர்ப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment