அமைதி ஒப்பந்தம்னா Realஆ இருக்கணும்… இல்லேன்னா எங்க தாக்குதல் Royalஆ இருக்கும்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம், அமல்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே பெரும் விரிசல்களை சந்தித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் ஒரு ‘உண்மையான ஒப்பந்தம்’ எட்டப்படாவிட்டால், அந்த நாட்டின் மீது இதுவரை இல்லாத அளவிற்கு “மிகப்பெரிய மற்றும் வலிமையான” தாக்குதல்களை அமெரிக்க ராணுவம் நடத்தும் என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் தரப்பில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, இந்த அமைதி திட்டத்தில் யுரேனியம் செறிவூட்டும் உரிமை மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், ஈரானின் இந்த கோரிக்கைகளை அமெரிக்கா முற்றிலுமாக மறுத்துள்ளது. ஊடகங்களில் உலவும் 10 அம்ச திட்டங்கள் அனைத்தும் ‘வெறும் வதந்திகள்’ என்று ட்ரம்ப் சாடியுள்ளார். இது தொடர்பாக தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது என்பதும், ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பாக திறந்து விடப்பட வேண்டும் என்பதும் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயங்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த சூழலில், அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளின் பிரதிநிதிகள் வரும் சனிக்கிழமை அன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்தத்தை ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தமாக மாற்றுவதே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும்.

இறுதியாக, மத்திய கிழக்கின் அமைதி என்பது ஒரு மெல்லிய நூலிழையில் தொங்கி கொண்டிருக்கிறது. ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கான அழைப்புகள் விடுக்கப்பட்டாலும், மறுபுறம் ராணுவ பலத்தைக் காட்டி மிரட்டும் போக்கும் நீடிக்கிறது. ஈரானின் இராஜதந்திர நகர்வுகளும், ட்ரம்ப்பின் ஆக்ரோஷமான எச்சரிக்கைகளும் எதிர்வரும் நாட்களில் மோதலை தணிக்குமா அல்லது ஒரு மிகப்பெரிய போருக்கு வழிவகுக்குமா என்பது இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையின் முடிவில்தான் தெரியவரும்.

Leave a Comment