தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது ஒரு சாதாரண ஆட்சி மாற்றமாக மட்டும் அமையாமல், ஒரு மிகப்பெரிய அரசியல் சுனாமியாக உருவெடுத்துள்ளது. தேர்தல் வியூக வகுப்பாளரும் IBTS நிறுவனருமான திருநாவுக்கரசு, இந்த தேர்தலின் பின்னணியில் நடந்த பல அதிரடியான உண்மைகளை உடைத்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பே விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திற்கு சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்று இவர் கணித்திருந்தாலும், அது இடங்களாக மாறுமா என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. ஆனால், இன்று 119 இடங்கள் என்ற பெரும்பான்மையுடன் தவெக அரியணை ஏறுவது, திராவிட கட்சிகளுக்கு மக்கள் கொடுத்த மரண அடியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி என்பது வெறும் அதிர்ஷ்டம் அல்ல, கடந்த காலங்களில் அண்ணாமலை போன்றவர்களால் விதைக்கப்பட்ட மாற்றத்திற்கான விதை, இன்று விஜய்யால் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் திமுக சந்தித்த மிகப்பெரிய வீழ்ச்சிக்கு அக்கட்சியின் மிதப்பும், அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் அணுகுமுறையுமே முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் நலனை விட வசூல் மற்றும் கமிஷன் ஆகியவற்றிற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், அடிமட்டத் தொண்டர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் திமுக மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். குறிப்பாக, முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூரிலேயே திமுக பின்னடைவை சந்தித்தது அக்கட்சிக்கு விழுந்த மிகப்பெரிய இடி. தேர்தல் நேரத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட பணம் கூட வாக்குகளாக மாறவில்லை என்பதிலிருந்தே, மக்கள் மாற்றத்தை எவ்வளவு தீவிரமாக விரும்பினார்கள் என்பது தெளிவாகிறது.
அதிமுகவைப் பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமியின் தலைமை இந்தத் தேர்தலில் மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட குளறுபடிகள், சரியான வேட்பாளர்களைத் தேர்வு செய்யாதது மற்றும் எடப்பாடியின் பலவீனமான பிரச்சாரம் ஆகியவை அதிமுகவை மூன்றாம் இடத்திற்குத் தள்ளியுள்ளன. சுமார் 80 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளதும், வெறும் 50 தொகுதிகளுக்குள்ளேயே அக்கட்சி சுருங்கியிருப்பதும் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலத்திற்கே கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விஜய்யின் வருகை அதிமுகவின் கோட்டைகளாகக் கருதப்பட்ட கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய ஓட்டையை விழுத்தியுள்ளது.
தேசியக் கட்சியான பாஜக தமிழகத்தில் தனது செல்வாக்கை முற்றிலுமாக இழந்துவிட்டது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோது ஒருவித எழுச்சி தெரிந்தாலும், தேர்தலுக்கு முன்பாக அவர் எடுத்த தவறான முடிவுகள் மற்றும் அதிமுக கூட்டணியை இழந்தது ஆகியவை பாஜகவை மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. ஒரு காலத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற பாஜக, இந்தத் தேர்தலில் நோட்டாவை விடக் குறைவான வாக்குகளையே பல இடங்களில் பெற்றுள்ளது. அண்ணாமலைக்கும் விஜய்க்கும் இடையே இருந்த ‘மாற்றத்திற்கான’ போட்டியில் விஜய் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக உருவெடுத்ததால், பாஜகவிற்குச் செல்ல வேண்டிய ஓட்டுகள் அனைத்தும் தவெக பக்கம் திசை திரும்பின.
விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து திருநாவுக்கரசு ஒரு வியப்பூட்டும் தகவலைப் பகிர்ந்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக விஜய்யுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் உரையாடியதாகவும், அப்போது பாஜக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைப்பதா என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது விஜய் எந்த ஒரு பெரிய கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நின்று களம் காண வேண்டும் என்ற ஆலோசனையை அவர் வழங்கியுள்ளார். ஒருவேளை விஜய் அன்று பாஜக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், அவரது அரசியல் வாழ்க்கை இன்று முடிவுக்கு வந்திருக்கும். தனது அடையாளத்தைத் தொலைக்காமல் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் அந்தத் துணிச்சலான முடிவே, இன்று அவரை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்துள்ளது என்று திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
மேலும் இனிமேல் சர்வே எடுக்க போவதில்லை என்றும், அடுத்தகட்டமாக அரசியல் கட்சியில் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார். அவர் எந்த கட்சி என சொல்லவில்லை என்றாலும், அனேகமாக தவெகவில் தான் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.