நீட் போராட்டத்தில் நீங்கள் எப்படி இடம் கொடுக்கலாம்? இடது கம்யூனிஸ்ட் கட்சிக்கு தவெக நோட்டீஸ்.. ஆளும் கூட்டணியில் இருந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷமிடும் கூட்டத்திற்கு எப்படி இடம் கொடுக்கலாம்? திமுகவினரும் திரையுலகினரும் கலந்து கொண்டபோது ஏன் தடுக்கவில்லை? கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக.. கூட்டணியில் சிறு உரசலா?

சென்னையில் நடைபெற்ற ‘நீட்’ தேர்வு எதிர்ப்புப் போராட்டம் ஒன்று தற்போது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தில்லியில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தங்களது கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடம் ஒதுக்கியதுதான் தற்போது பெரிய சர்ச்சைக்குரிய விவகாரமாக வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வு, இடையில் திசை மாறிச் சென்றுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிலர், ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் திசைதிருப்பித் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எதிராகவும், தற்போதைய அரசுக்கு எதிராகவும் கடுமையான கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளனர். முதலமைச்சரின் உருவப்படத்திற்கு எதிராகவும், அரசு நிர்வாகத்தைக் கண்டித்தும் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பப்பட்ட விவகாரம் ஆளும் தரப்பையும், தோழமைக் கட்சிகளையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து உளவுத்துறை மூலமாகத் தகவல்களை அறிந்த த.வெ.க. மற்றும் அதன் மேலிடம் கடும் கொந்தளிப்படைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தங்களது கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் அலுவலகத்திலேயே, தங்களது தலைவரான முதலமைச்சருக்கு எதிராகவே போராட்டத்திற்கு இடம் கொடுக்கப்பட்டிருப்பது குறித்து அவர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். “எங்கள் கூடவே இருந்துவிட்டு, எங்க தலைவருக்கே எதிராகப் போராட இடம் தருவீர்களா?” என்ற கேள்வுயை எழுப்பி, இ.க.கம்யூ. கட்சித் தலைமையிடம் த.வெ.க. தரப்பு தங்களது கடுமையான எதிர்ப்பைப் புகாராகத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள இ.க.கம்யூ. தரப்பினர், தாங்கள் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு அமைதியான முறையில் நீட் எதிர்ப்புப் போராட்டம் நடத்த மட்டுமே இடம் வழங்கியதாகவும், ஆனால் திமுகவை சேர்ந்த சிலர் மற்றும் திரை பிரபலங்கள் வேண்டுமென்றே இந்த ஆர்ப்பாட்டத்தின் திசையை மாற்றி முதலமைச்சருக்கு எதிரான அரசியல் தளமாக இதைப் பயன்படுத்திவிட்டதாகவும் கூறியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தின் போது நடந்த இந்த எதிர்பாராத திருப்பத்தை உடனடியாகத் தங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றும், கடைசி நேரத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நிலைமை கைமீறிப் போய்விட்டதாகவும் அவர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்தச் சம்பவத்தால் த.வெ.க. மற்றும் இ.க.கம்யூ. கட்சிகளுக்கு இடையே இருந்த கூட்டணியில் லேசான உரசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன. குறிப்பாக, இ.க.கம்யூ. கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மறைமுகமாகத் த.வெ.க.-வைச் சாடுவதாகவும், ஆனால் மறுபுறம் த.வெ.க. தரப்போ “இனிமேல் இப்படி நடக்கக் கூடாது” என்று எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. “நம்மை நாமே கேள்வி எழுப்புவதை அனுமதிக்க முடியாது, நாம் அவர்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும்” என்று த.வெ.க. மேலிடத்தில் தீவிர விவாதங்கள் எழுந்துள்ளதால், இந்த விவகாரம் கூட்டணிக்குள் மேலும் சில சிக்கல்களை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒட்டுமொத்தத்தில், நீட் தேர்வுக்கு எதிராகத் ஒரு போராட்டம் தற்போது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கட்சிக்கு எதிரான கருத்துகள் தோழமைக் கட்சியின் அலுவலகத்திலேயே அரங்கேறியது அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளது. கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடுகளும் சந்தேகங்களும் எதிர்காலத்தில் எத்தகைய அரசியல் தாக்கங்களை உண்டாக்கப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment