india
பேப்பர் லீக் அரசு நீட்டை எப்போது ரத்து செய்யும்? – காங்கிரஸ் சாடல்!
நீட் தேர்வு முறைகேடுக்குப் பின் தற்போது நெட் தேர்வும் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதேபோல் இந்த பேப்பர் லீக் அரசு நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியிருக்கிறது.
நாடு முழுவதும் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு பல்கலைக்கழக மற்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வான யுஜிசி NET-2024 தேர்வை தேசிய தேர்வு முகமை கடந்த 18-ம் தேதி இரண்டு ஷிஃப்ட்களில் நடத்தியது. இந்தத் தேர்வு முடிந்து இரண்டு நாட்கள் கூட முழுமையாக முடியாத நிலையில், அந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்து மத்திய கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், `நெட் தேர்வு குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைபர் கிரைம் துறை முக்கியமான சில குறிப்புகளை ஜூன் 19-ம் தேதி கொடுத்தது. இதன்மூலம் நெட் தேர்வின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக வாய்ப்பிருப்பதாகத் தெரியவந்தது.
வெளிப்படைத் தன்மை மற்றும் உண்மைத் தன்மையோடு நடைபெற வேண்டும் என்கிற நோக்கத்தோடு, 2024 யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் முடிவெடுத்திருக்கிறது. புதிதாக நெட் தேர்வு நடத்தப்படும். இதுகுறித்த அறிவிப்பு தனியாக வெளியாகும். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிஐ அமைப்பிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், தற்போது நெட் தேர்வும் ரத்து செய்யப்பட்டிருப்பது தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியிருப்பதாக விமர்சனம் எழுந்திருக்கிறது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, `நீங்கள் தேர்வுகள் பற்றி நிறையவே விவாதிக்கிறீர்கள். எப்போதுதான் நீட் தேர்வு பற்றி விவாதிப்பீர்கள்? யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது லட்சக்கணக்கான மாணவர்களின் வெற்றி. நமது இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை நசுக்க நினைத்த மோடி அரசின் ஆணவத்துக்கான தோல்வி இது’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த பேப்பர் லீக் அரசு நீட் தேர்வை எப்போது ரத்து செய்யும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதையும் படிங்க: நாடு முழுவதும் 9 லட்சம் பேர் எழுதிய நெட் தேர்வு ரத்து!.. மத்திய அரசு அதிரடி..