latest news
கள்ளக்குறிச்சியில் விஷ சாராய பலி!.. நடிகர் விஜய் நேரில் ஆறுதல்!…
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் வசிக்கும் பலர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கி|றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகள் மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆகியவற்றிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக ஒரு பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுவரை 39 பேர் பலியாகிவிட்டதாக செய்திகள் வெளிவந்திருக்கிறது. 90க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் கண் பார்வையை இழந்திருப்பதாகவும் அதிர்ச்சி செய்திகள் வெளியாகி இருக்கிறது.
விசாரணையில் அவர்கள் குடித்த கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்திருந்ததால் அது விஷமாக மாறியதே பலரின் மரணத்திற்கும் காரணம் என்பது தெரியவந்திருக்கிறது. ஒருபக்கம், விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மேலும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் சொன்னார். அப்போது ‘என்னை காப்பாத்து தலைவா’ என ஒரு இளைஞர் கதறி அழுதார்.
அதேபோல், இவன்தான் எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரம். நீங்கள்தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என முதியவர் ஒருவர் விஜயின் காலில் விழுந்தார். எல்லோரும் ஆறுதல் சொன்ன விஜய் மருத்துவர்களிடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் கேட்டறிந்தார். மேலும், ‘என்னால் முடிந்த உதவிகளை கண்டிப்பான நான் செய்வேன்’ என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.
விஜய் வருவது தெரிந்ததும் ரசிகர்கள் பலரும் அங்கு கூடிவிட்டனர். இதனால், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும், மருத்துவமனையிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.