india
ஃபேஸ்புக் விளம்பரம்..ஈஸியா மாத்தலாம் கிட்னியை… டெல்லி போலீஸை அதிரவைத்த மோசடி!
கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சை என்கிற பெயரில் மோசடியில் ஈடுபட்ட வங்கதேச கும்பல் மற்றும் மருத்துவர் ஒருவரை டெல்லி போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ராஜஸ்தானில் கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சை செய்யும் மோசடி கும்பல் ஒன்றை போலீஸார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதேபோன்ற மோசடியில் ஈடுபடும் வங்கதேச கும்பல் பற்றிய ரகசியத் தகவல் போலீஸுக்குக் கிடைத்திருக்கிறது. அந்த கும்பல் டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படுவதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீஸ், வங்கதேசத்தைச் சேர்ந்த ரஸல், முகமது மியான் மற்றும் இஃப்தி ஆகியோரைக் கைது செய்தனர். இவர்களுடன் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ரதீஷ் பால் மற்றும் கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சைகளைச் செய்த மருத்துவர் விஜயகுமாரி ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஃபேஸ்புக் வாயிலாக கிட்னி வேண்டுமா என்கிறரீதியில் விளம்பரம் கொடுப்பார்களாம் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள். அதேபோல், பணக் கஷ்டத்தில் இருப்பவர்கள், கிட்னி தானம் செய்து லட்சங்களில் சம்பாதிக்கலாம் என்பது போன்று இன்னொரு விளம்பரமும் இவர்கள் தரப்பில் கொடுக்கப்படுமாம்.
கிட்னி தானம் கொடுப்பவர்களும் அதைப் பெறுபவர்களும் என இரண்டு தரப்பினருமே வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது போன்று பார்த்துக் கொள்வார்களாம். அவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதுபோல் டெல்லியில் இருக்கும் வங்கதேச தூதரகம் சார்பில் போலியான ஆவணங்களைத் தயார் செய்து, டெல்லியை ஒட்டிய குர்கானில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு இரு தரப்பினரையும் வரவைப்பார்களாம்.
அங்கு கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சையை விஜயகுமாரி செய்வாராம். இப்படி, கடந்த 2021 முதல் 2023 வரையில் மட்டுமே விஜயகுமாரி 15 முதல் 16 அறுவைச் சிகிச்சைகளைச் செய்திருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. தானம் கொடுப்பவர்களுக்கு 2 முதல் 4 லட்ச ரூபாயைக் கொடுக்கும் இந்த கும்பல், அதுவே தானம் பெறுபவர்களிடம் இருந்து ரூ.25-40 லட்சம் வரை கறந்திருக்கிறார்கள். ஒவ்வொரு அறுவைச் சிகிச்சைக்கும் மருத்துவருக்கென தனியாக 2-4 லட்ச ரூபாயையும் கொடுத்திருக்கிறது இந்தக் கும்பல்.