ஒரே க்ளிக்கில் ரூ. 300 கோடி… பயனர்களுக்கு பிரதமர் திட்டத்தின் குட் நியூஸ்… என்ன தெரியுமா?

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் இன்றும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. வேலையில்லாத பிரச்சினையை சரி செய்ய மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவை படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தான் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் நாடு முழுக்க 11,480 சேவை துறை பயனாளிகளுக்கு ரூ. 300 கோடி கடன் மானியம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மானியத் தொகையை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையமான KVIC நேற்று முன்தினம் (ஜூன் 17) வழங்கியது. இந்த மானியத் தொகை ரூ. 906 கோடி கடன் அனுமதிக்கு எதிராக வழங்கப்பட்டது.

இந்த தொகையை விடுவிக்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள ராஜ்காட் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் தனது குழுவினருடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வைத்து பயனாளிகள் வங்கிக் கணக்குகளுக்கு மானிய தொகை டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டது. இதில் KVIC-இன் தலைமை நிர்வாக அதிகாரி ரூப் ராசி மற்றும் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

வேலைவாய்ப்பு உருவாக்கும் இந்த நிதியுதவி திட்டத்தில் நாட்டின் ஆறு மண்டலங்களும் பங்கேற்றன. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் 4564 திட்டங்களுக்கு ரூ. 116 கோடி வரையில் மானியம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டங்களுக்கு ரூ. 343 கோடிக்கும் அதிகமான தொகை கடன்களாக வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

இதேபோல் மேற்கு மண்டல மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவாவில் மொத்தம் 772 திட்டங்களுக்கு ரூ. 82 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ரூ. 26 கோடிக்கும் அதிகமான தொகை மானியமாக வழங்கப்பட்டு இருக்கிறது. மத்திய மண்டலத்தில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 2403 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ. 72 கோடி வரை மானியம் அளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மண்டலத்தில் பீகார், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் ஆகிய இடங்களில் 996 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ. 22 கோடி மானியம் மற்றும் ரூ. 71 கோடி வரை கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மனோஜ் குமார், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் தற்சார்பு மற்றும் வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை அங்கீகரிக்கும் தூணாக மாறியுள்ளது. இந்தத் திட்டம் நிதி உதவி வழங்குவதோடு லட்சக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களை சுயதொழிலில் ஈடுபட செய்துள்ளது.

இதுதவிர தொழில்முனைவோருடன் இணைக்கும் சமூக இயக்கமாகவும் இந்தத் திட்டம் மாறியுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் வேலைவாய்ப்பு மற்றும் சுயசார்பை உருவாக்குவதில் இந்தத் திட்டம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது, என்று கூறினார்.

Leave a Comment